அலுவலக பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளது. உலகின் மிகப்பெரிய பொது போக்குவரத்து துறையாகவும் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயானது தெற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே என 17 மண்டலங்களின் கீழ் 69 பிரிவுகளில் சுமார் 69,000 கி.மீ வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இங்கு தொழில் நுட்பம், வணிக பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் அனைத்து துறை தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் “இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ஆம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். கடித பரிமாற்றங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும். துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களில் இந்தி பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தி அது குறித்த விபரங்களை இந்தி துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தெற்கு ரெயில்வே வெளியிடும் அறிவிப்புகள், ஒப்புதல், ஏற்பு, அனுமதி, முன்மொழிவு போன்ற சொற்கள் இந்தியில் குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல துறைகளில் இந்தி மொழி திட்டமிட்டு திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
