தவெக மாநாடு … மதுரையில் கொடிக்கம்பம், பேனர்களை அகற்ற உத்தரவு!

Published On:

| By Kavi

மதுரை மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகின்றன.

மதுரையில் தவெக 2ஆவது மாநாடு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு மாதமாக மதுரை பாரபத்தியில் மாநாட்டுக்கான பணிகள் நடந்து வந்தன. சாலையின் இருபுறமும் கொடிகம்பங்கள் நடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் என பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது அக்கட்சி தலைமை.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகையைச் சேர்ந்த அருளரசன் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதில், “தமிழகத்தில் அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களிலும், சாலையோரங்களிலும், சாலை நடுவிலும் பேனர்கள், பதாகைகள், கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் வைக்கப்படும் கொடிக்கம்பங்கள் சாய்வதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே இதுபோன்று அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை, கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 20) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது அரசு சார்பில் வழக்கறிஞர் வீராகதிரவன் ஆஜராகி, “அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள், கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று வாதம் முன்வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “மதுரை முழுவதும் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவை வைக்கட்டுள்ளதை பார்த்திருக்கிறோம். அவற்றை ஏன் அகற்றவில்லை. மதுரையில் ஏராளமான கொடிக்கம்பங்கள், பேனர்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய நாங்கள் தயார்” என்று கூறினர்.

தொடர்ந்து மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணி நேரத்துக்குள் அகற்றவேண்டும். பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து மதுரை காவல் ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த விசாரணையின் போது, தவெக மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது குறித்து வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன் முறையிட்டனர்.

இந்தசூழலில் காற்று பலமாக வீசும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது உரிய அனுமதி இல்லாமல் வைக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரையில் தவெக மாநாட்டுக்காக பல்வேறு இடங்களிலும் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர், அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று தவெகவினருக்கு அறிவுறுத்தினர்.

அதன்பேரில் சாலை நடுவில் உள்ள பேனர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை தவெகவினர் அகற்றி வருகின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share