டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், நேற்று இரவு வரை வலுவிழக்காமல் தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வந்தது. தற்போது அந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இந்த புயல் சின்னம் இன்று வடதமிழகம் – புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் காரணமாக நேற்று காலை முதலே பட்டினம்பாக்கம், மெரினா, நீலாங்கரை, திருவான்மியூர், காசிமேடு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
புயல் வலுவிழந்தாலும் பலத்த காற்று வீசுவதால் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஈக்காட்டு தாங்கல், கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆவடி அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
ஆரஞ்சு அலர்ட்
இந்நிலையில் இன்று (டிசம்பர்.1) சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
