அசாம் மற்றும் மேகாலயாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Published On:

| By admin

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று (ஜூன் 20) அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசாமில் 33 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 5,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பிரம்மபுத்திரா மற்றும் கோபிலி ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்து வருகிறது. மேலும் பிரம்மபுத்திரா ஆற்றின் மூன்று இடங்களில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள 1.80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 744 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மேகாலயாவில் தொடர்ந்து பெய்யும் மழையால் அங்கு சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு காரணமாக இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் தற்போது வரை 62 பேர் இறந்துள்ளனர், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் திரிபுராவில் இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 10,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். நிலச்சரிவு காரணமாக மாநிலத்துக்கான சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவது கடினமாக உள்ளது. வங்கதேசம் வழியாக நிவாரணப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share