விவசாயிகள் மீதான அக்கறை: ஓபிஎஸ்

Published On:

| By Balaji

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவும், பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

ADVERTISEMENT

இதனிடையே சட்டப்பேரவையில் பேசிய ஓபிஎஸ், “3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எனது நிலை என்ன என்பது அவை முன்னவர் துரைமுருகனுக்குத் தெரியும்” என்றார். அதோடு, நதியில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என்ற சிவாஜி கணேசன் பாடலை மேற்கோள் காட்டி இதுதான் எனது நிலைமை என குறிப்பிட்டார்.

தற்போது இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

”விவசாயிகளின்‌ வருமானம்‌ பன்மடங்கு உயரும்‌ என்ற நல்ல நோக்கத்தின்‌ அடிப்படையில்‌ இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன.

இருப்பினும், இந்த மூன்று சட்டங்கள்‌ மூலம்‌, விளைபொருட்களில்‌ பெரும்‌ வணிக நிறுவனங்கள்‌ ஆதிக்கம்‌ செலுத்தத்‌ தொடங்கும்‌ என்றும்‌, விவசாயிகளின்‌ நிலங்கள்‌ பறிபோய்விடும்‌ என்ற அச்சம்‌ விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும்‌, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும்‌ தெரிவித்து ஓராண்டிற்கும்‌ மேலாக விவசாயிகள்‌ தொடர்‌ ‌ போராட்டம்‌ நடத்தி வந்தனர்‌.

ADVERTISEMENT

இந்தச்‌ சூழ்நிலையில்‌, மேற்படி சட்டங்களில்‌ உள்ள பயன்களை விவசாயிகளின்‌ ஒரு பிரிவினரிடம்‌ புரியவைக்க முடியவில்லை என்று தெரிவித்து இந்த சட்டங்களைத் திரும்பப்‌ பெறுவதாக இந்தியப்‌ பிரதமர்‌ தெரிவித்துள்ளார்‌. இதன்மூலம்‌, இந்தியப்‌ பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும்‌, விவசாயிகளின்பால்‌ அவருக்கு உள்ள அக்கறையும்‌ வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின்‌ நண்பன்‌ என்பது வெளிச்சம்‌ போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியப்‌ பிரதமரின்‌ இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இதற்காக அதிமுக சார்பில்‌ பிரதமருக்கு எனது நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share