அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ஜெயபிரதீப் ஆகியோர் இன்று (மார்ச் 16) தெரிவித்துள்ளனர். OPS TTV Jayapradeep supports
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே நடந்து வரும் மோதல் போக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “அதிமுக பலவீனமாகி வருவதால் அங்குள்ள 90 சதவிகித தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜெயலலிதாவின் நோக்கமான அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை அங்குள்ள மூத்த நிர்வாகிகள் எடுக்கிறார்கள். அதனால் அங்குள்ள தொண்டர்களின் வெளிப்பாடு தான் செங்கோட்டையன் மூலம் வெளிப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சு நாகரீகம் இல்லாதது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன்,
“நாகரிகம், அநாகரிகம் பற்றி செங்கோட்டையனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எப்போதும் அமைதியாக இருப்பவர். எந்த ஒரு காண்ட்ரோவெர்சியிலும் சிக்காதவர். ஜெயலலிதா விட்டுச்சென்ற ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்ந்தார்.
ஜெயலலிதா நிதி ஒதுக்கிய அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் அவரது படமும் எம்ஜிஆர் படமும் புறக்கப்பணிக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளம்பர பிரியர் போல அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியின் பதாகைகள் மட்டும் இருந்தது பார்க்கவே நகைச்சுவையாக இருந்தது.
அதனால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் குரல் கொடுத்திருக்கிறார். அதிமுகவில் உள்ள 90 சதவிகிதம் பேரின் மன ஓட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நான் செங்கோட்டையனை தூண்டி விடுவதற்காக பேசவில்லை. செங்கோட்டையனின் நடவடிக்கை நியாயமாக உள்ளது.
அவரை முதல்வராக்கியவர்களுக்கு துரோகம், ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம், நான்கு ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றித்தந்த பாஜகவுக்கு துரோகம் செய்துள்ளார்.
இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. எடப்பாடி முதலில் நான் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால், இப்போது ஏன் அப்படி சொல்வதில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “தமிழகத்தில் மீண்டும் 2026-ல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்றால், பிரிந்து கிடக்கின்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எண்ணமாகவும், அதிமுக தொண்டர்களின் எண்ணமாகவும் உள்ளது. அதனால் ஈகோவை உதறி தள்ளிவிட்டு கட்சி நலன் கருதி ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கொங்கு நாட்டு தங்கம். எனது அரசியல் குருமார்களின் ஒருவர். அதிமுகவின் உண்மை தொண்டன். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். OPS TTV Jayapradeep supports