சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக “திராவிட மாடல்” என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம். திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதும் ஆண்டொன்றிற்கு ரூ.6000 வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ரூ.18 ஆயிரம் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது திமுக.
கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து மக்கள் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. அரசு.
ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் இதை நிறைவேற்றிய திமுக அரசு, இதனை ஈடு செய்யும் வகையில், ஒரு சில மாதங்களிலேயே ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அளவுக்கு உயர்த்தியது. இதேபோன்று ஆவின் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் போன்றவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளது. ஆவின் வெண்ணெய்க்கு இன்று மிகப் பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஆவின் பொருட்கள் தாராளமாக கிடைப்பதில்லை. ஆவின் பால் விநியோகம் வெகுவாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. பாலுக்கான கொள்முதல் உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி.
அம்மா உணவகங்களை நீர்த்து போகச்செய்தது, தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காதது, இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு திமுக எண்ணற்ற துரோகங்களை செய்துள்ளது” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
செல்வம்
