அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 10) சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சனைகள் தீர்ந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கிடையில் இன்று போடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என விரும்பும் அனைவரும், பிரிந்து இருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கின்றனர். இதுவே மக்களின் விருப்பம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. இதனால் அதிமுகவில் நிலவும் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக–பாஜக தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, திமுக பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.
இந்த நிலை மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே பாஜக உயர்மட்டத் தலைவர்களின் கணிப்பாக உள்ளது. அதிமுக கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுக்கான வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் திரண்டுவர வேண்டும் என்பதே அவரின் முதன்மை நோக்கமாக உள்ளது என்றார்.
