அதிமுகவில் இனி இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்றெல்லாம் இல்லை. இனி ஒரே தரப்பு தான் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்டு 17) தீர்ப்பளித்தது.
இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அதே இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சிதலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோருக்கு இந்த நல்ல நேரத்தில் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எம்ஜிஆர் 10 ஆண்டுகளும், ஜெயலலிதா 16 ஆண்டுகளும் தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கி இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவிய நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதனை அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அர்ப்பணிக்கிறோம்.
தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ அது இன்று நடந்தேறியுள்ளது. தொண்டர்கள் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது.
அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தின் மூலம் கட்சியை கைப்பற்ற நினைத்தால் அது நடக்காது என்பதை தான் இந்த தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது.
இந்த தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த முழுமையான வெற்றி. அதிமுக கொள்கை, கோட்பாடுகளை யாரெல்லாம் ஏற்று கொள்கிறார்களோ, அவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் சேர்த்துகொள்வோம்.
எனக்கு தொண்டர்கள் அளித்துள்ள ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பின்படி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் கட்சியை ஒருங்கிணைத்து செல்வேன்.
இனி இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்றெல்லாம் இல்லை இனி ஒரே தரப்பு தான். கடந்த ஜூன் 23ம் தேதி யார் யார் என்ன பதவியில் இருந்தார்களோ, அதே பதவியில் நீடிப்பார்கள்.
எங்களுடைய எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்கள் விருப்படி தான் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக பொதுக்குழு செல்லாது: நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி தீர்ப்பு!