ஸ்டாலினுடன் சந்திப்பு… திமுகவில் இணைகிறீர்களா? ஓபிஎஸ் சொன்ன பதில்!

Published On:

| By Kavi

முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருடன் சென்ற ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பிரிந்து மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில், யாருடன் செல்வது என தொடர்ந்து ஓபிஎஸ் ஆலோசித்து வந்தார்.

தேனி செட்டியபட்டியில ஆதரவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், “இப்ப நம்ம கிட்ட இருக்கிறது ரெண்டு ஆப்ஷன்ஸ்.. ஒன்னு திமுக, இன்னொன்னு விஜய் கூட்டணி

ADVERTISEMENT

திமுக கூட்டணிக்கு இப்ப இருக்கிற உரிமை மீட்பு கழகம் பெயரிலேயே போய் சேரலாம்.. நானும் ஐயப்பனும் 2 எம்.எல்.ஏக்கள் இருக்கிறதால கூடுதலா 1 சீட்டுன்னு மொத்தம் 3 சீட் தருவாங்க..

இன்னொன்னு விஜய் கட்சி கூட்டணியில்ல சேர்றது.. செங்கோட்டையன்கிட்ட விஜய் கூட்டணிக்கு போறதைப் பத்தி பேசுனேன்… விஜய்கிட்ட போனால் அதிகமா சீட் கிடைக்கும்தான்.. ஆனா ஜெயிப்போமான்னுதான் தெரியலையே? அதனால என்ன செய்யலாம்னு சொல்லுங்க” என பேசியிருந்தார். இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில் அறிவாலயமா? பனையூரா? திக்குதெரியாமல் திணறும் ஓபிஎஸ் என்று தலைப்பில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் விரிவாக சொல்லியிருந்தோம்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழ்நாடு முதலவ்ர் ஸ்டாலினை சட்டப்பேரவை வளாகத்தில் ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இன்றைக்கு சிறப்பாக நிறைவு பெற்றதன் காரணமாக முதலமைச்சரை சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தேன்” என்றார்.

அவரிடம், உங்களுடைய ஆதரவாளர் ஐயப்பன் சட்டப்பேரவையில் உள்ளே பேசும்போது, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆசியோர் ஆசியோடு மீண்டும் இந்த ஆட்சி தொடரும், முதலமைச்சராக ஸ்டாலின் மீண்டும் வருவார் என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் உள்ளேதான் இருந்தீர்கள், உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஓபிஎஸ், இது அவருடைய எண்ணம், செயல்பாடுகள், தமிழக மக்கள் இன்றைக்கு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதை அவர் சொல்லியிருக்கிறார் என்று பதிலளித்தார். 

உங்களுடைய எண்ணம் என்ன? என்ற கேள்விக்கு, 

 “பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியினுடைய நிலை, அவர்கள் இந்த நாட்டுக்குச் செய்த அந்த சாதனைகள், இவையெல்லாம் மக்களுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. தமிழகத்திற்கே வழி பிறந்திருக்கிறது” என்றார். 

திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார் ஓபிஎஸ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share