ஜெயலலிதாவின் உயிர்போக ஓபிஎஸ் தான் காரணம் – ஆர்.பி.உதயகுமார்

Published On:

| By indhu

OPS is the reason for jeyalalitha's death - R.B.Udayakumar

ஜெயலலிதாவின் உயிர் போவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மூன்று முறை அதிமுக சார்பாக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தால் இன்று கட்சியின் கரை வேட்டியை கூட கட்ட முடியவில்லை. அதிமுக கட்சியின் பெயரைக்கூட அவரால் பயன்படுத்த முடியவில்லை.

இது எதனால், அவர் என்ன பாவம் செய்தார், என்ன துரோகம் செய்தார் என நான் யோசித்து பார்த்தேன்.

அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் நினைத்திருந்தால், அம்மாவை வெளிநாட்டிற்கு கூட கூட்டிச் சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அவர் அப்போது எதுவும் செய்யவில்லை. மெளன சாமியாராக இருந்துவிட்டார்.

அதன் காரணமாகத்தான், பாவம் ஏற்பட்டு அவரை அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என எனக்கு தோன்றுகிறது. ஒரே ஒரு சீட்டுக்காக வீதியில் நின்று கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அம்மாவின் உயிர் பறிபோக ஓபிஎஸ்தான் காரணம். அம்மாவின் ஆன்மா, இந்த தேர்தல் முடிந்த பின் உங்களை அரசியலை விட்டே போகும் நிலைக்கு தள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர் மூர்த்தி ‘இந்த தேர்தலில் தங்க தமிழ்செல்வன் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் வரை காத்திருக்க வேண்டாம்; நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள்.

இந்த முறை தேனி தொகுதியில் அதிமுக கட்சி தான் வெற்றி பெறும். நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை.

ஓட்டுக்கேட்டு தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் மக்கள் அனைவரும், ’நாங்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுகிறோம்’ எனக் கூறுகிறார்கள். டிடிவி தினகரனை பார்த்தாலும், தங்க தமிழ்ச்செல்வனை பார்த்தாலும் மக்களுக்கு இரட்டை இலை சின்னம்தான் நினைவு வருகிறது. கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்களாகிய நீங்கள் புகட்ட வேண்டும்” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமநாதபுரம் : 5 ஓபிஎஸ்-கள் போட்டி!

Seshu: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share