“அதிமுகவில் ஓ.பி.எஸ் ஒரு கரும்புள்ளி” : சி.வி.சண்முகம்

Published On:

| By Kalai

சுய லாபத்திற்காக, பதவி ஆசைக்காக கட்சி விதிகளை மாற்றியது ஓ.பன்னீர்செல்வம் தான், அதிமுக பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

51 வது அதிமுக தொடக்க விழாவினை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுக கட்சி விதிகள் மாற்றப்பட்டது அபாயகரமானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், “சாத்தான் வேதம் ஓதக்கூடாது. இதை சொல்வதற்கு ஒரு தகுதி, தராதரம் வேண்டும். அது ஓபிஎஸ்க்கு இல்லை.

சட்டதிட்டங்களை மாற்றலாமா மாற்றகூடாதா, அப்படி மாற்றினால் எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது என்று சொல்லும்  ஓ.பன்னீர்செல்வம், அம்மாவின் மறைவிற்கு பிறகு, பதவி ஆசைப்பிடித்து,

முதலமைச்சர் பதவி தனக்கு இல்லையே என்ற ஆத்திரத்தில் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கினார்.

அவருக்கு எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ, கட்சியையோ பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது. சாதாரண அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ. பன்னீர் செல்வத்துக்கு கிடையாது.

பாராசக்தியின் வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிற ஓபிஎஸும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் அதிமுகவை அழிக்க நினைக்கும் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினர். இருவருக்கும் இந்த இயக்கத்தைப் பற்றி பேச தகுதியே இல்லை.

விதிகளை திருத்தக்கூடாது என்று சொல்லும் ஓபிஎஸ், சுய லாபத்திற்காக, பதவிக்காக 2017ல் எம்.ஜி.ஆர் அவர்களால் கொண்டு வரப்பட்ட, பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற விதியை மாற்றியவர்.

பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து கட்சியிலேயே இல்லாத ஒருங்கினைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் பதவியை கொண்டு வந்தது யார்.

அவர் சொன்னதில் ஒரு உண்மை. கட்சியையும், சின்னத்தையும் முடக்கியவர்களை எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது.

மக்கள் விரோத திமுகவை ஒழிக்கவேண்டும் என்று தொடங்கப்பட்டதே அதிமுக என்ற இயக்கம். இந்த 50 ஆண்டுகால கழக வரலாற்றிலே ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி” என்று தெரிவித்துள்ளார்.

கலை.ரா

1972 அக்டோபர் 17…. வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்! 

மாணவி சத்யா கொலை: ரயில் ஓட்டுநரிடம் சிபிசிஐடி விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share