அதிமுக தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு உரிமை இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (ஜூன் 6) தெரிவித்துள்ளார்.
நேற்று சசிகலா, அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூன் 6) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்களை அழைக்க பன்னீர்செல்வத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, “அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தப்போது, மேலும் சோதனையை கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
பொதுக்குழு நடைபெற்றபோது, சென்னையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில் தாக்குதல் நடத்தி அங்கிருந்த ஆவணங்களை திருடி சென்றவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவை முடக்குவதற்காக பல அரசியல் தலைவர்களை பன்னீர்செல்வம் சந்தித்தார். சின்னத்தை முடக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி வைத்தவர். அதிமுக தொண்டர்களை ஒன்றிணையுமாறு அழைக்க பன்னீர் செல்வத்திற்கு தகுதியில்லை. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ராமநாதபுரத்தில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து பன்னீர்செல்வம் போட்டியிட்டார்.
ஜெயலலிதாவை குறிப்பிடுவதற்கும் பன்னீர்செல்வத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார். அவரோடு கூட்டணி வைத்துக்கொண்டு பன்னீர்செல்வம் தனது சுயநலத்தை பூர்த்தி செய்துக்கொள்ள முயல்கிறார்.
இதன் காரணமாக, அதிமுகவின் பெயரையும், தொண்டர்களையும், ஜெயலலிதாவையும் பற்றி பேச பன்னீர்செல்வத்திற்கு எந்தவித அருகதையும் இல்லை.
ஜெயலலிதாவிடம் பணிக்காக சென்றவர் சசிகலா. அப்படி சென்றவர் 36 ஆண்டுகாலம் அவரின் பின்னால் இருந்து பதவியை சுவைத்தார். சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதா இல்லம் நோக்கி வாருங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கை வெளிவந்து சுமார் 24 மணிநேரங்கள் ஆகி இருக்கும். தற்போதுவரை எத்தனை பேர் அந்த இல்லம் நோக்கி சென்று இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
எப்படியாவது அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா போன்ற கட்சிகள் இருந்தன. அப்போது அதிமுக கூட்டணி 18 விழுக்காடு வாக்கு சதவீதம் பெற்றது.
ஆனால், 2024 தேர்தலில் அதிமுகவும் தேமுதிக கூட்டணியில் உள்ளது. தற்போது 20.46 விழுக்காடு வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம்.
அதேபோல், 2019ல் திமுக 33.52 விழுக்காடுகள் பெற்று இருந்தது. தற்போது திமுக கூட்டணி 26.93 விழுக்காடு பெற்றுள்ளது. திமுகவிற்கு 6 விழுக்காடு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
தேசிய கட்சிகள் எப்போதும் தமிழகத்திற்கு உதவாது என்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை.
2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும்.
அண்ணாமலை செயல்படுவது என்பது ஒரு மாதிரியும், ஊடகங்களில் பேசுவது ஒரு மாதிரியுமாக உள்ளது. அண்ணாமலை பொய் சொல்வதில் மிகப்பெரும் வல்லவர். பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்தற்கு காரணம், அங்கு இருந்தவர்கள் எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள், எந்தளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதன்படியே வாக்கு சதவீதம் சற்று உயர்ந்துள்ளது.” என்று கே பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
மோடிக்காக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தேதி மாற்றம்!