அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?: ஓபிஎஸ் ஈபிஎஸ்

Published On:

| By christopher

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியான அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தால் தமிழக அரசியல் களம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவின் ஒற்றை தலைமை பதவியை குறிவைத்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பினரிடையே நடந்து வரும் மோதல் இன்னும் ஓயாமல் சென்று கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

நீதிமன்ற உத்தரவுபடி, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. கட்சியின் வங்கி செலவு கணக்குகள் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அனைத்தும் நடந்துள்ளன. அதனையடுத்து அவர் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

ADVERTISEMENT

அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போல!

அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தொண்டர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர், அ.தி.மு.க.வை எதிரிகளும், துரோகிகளும் சோ்ந்துகொண்டு அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது. தற்போது இந்த கட்சியை எளிதில் அழித்து விடலாம் என சிலா் கனவு காண்கிறாா்கள்.

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். மறைவின்போது அ.தி.மு.க. இதே நிலையை சந்தித்தது. அப்போது ஜெயலலிதா கட்சியை முன்னின்று நடத்தி வலுப்படுத்தினார். கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போன்று உயிா்த்தெழுந்து மேலே மேலே உயா்ந்து செல்லும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.” என்று தெரிவித்தார்.

அதேவேளையில் தேர்தல் ஆணையத்தின் முடிவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளனர். ஈபிஎஸ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில், பன்னீர் செல்வம் தனது தரப்புடன் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் தக்க வைக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் என் பக்கம்!

இந்நிலையில் நேற்று மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுக மாபெரும் தொண்டர்கள் இயக்கம். அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள்.

தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதனால், எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் இந்த கட்சியை உருவாக்கினாரோ, மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா எதற்காக உருவாக்கினாரோ அந்த எண்ணம் உறுதியாக நிறைவேறும் என்று தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

அதிமுக தலைமையை கைப்பற்ற நான், நீ என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு மாறி மாறி போட்டி போட்டு வருகிறது. அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளனர் என இருவரும் கூறி வந்தாலும், உண்மையில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று தொண்டர்கள் குழம்பி நிற்கின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?: அமைச்சர் சிவசங்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share