“அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 9) புகார் மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக அலுவலகத்துக்குள் புகுந்து ஓ.பன்னீர்செல்வம் கும்பல் பொருட்களைச் சூறையாடியது.
அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அவர் இங்கு வருவது என்பது சட்டவிரோதமான செயல். அவர் இங்கு வருவதை தடுக்கும் விதமாக தமிழக டிஜிபியிடம் மனு அளித்தோம். அவரும் அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
வைத்திலிங்கத்துக்கு அதிமுகவில் வேலையில்லை. அதனால், அமமுக வாருங்கள் என சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள். சிவில் நீதிமன்றத்தில் ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம்.
ஆனால் உயர் நீதிமன்றத்தின் முடிவு என்பதுதான் தற்போதைக்கு இறுதியானது. ஆக, அதையும் இதையும் ஒன்றாக்கக்கூடாது. அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு செல்வதற்கு அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது.
உறுப்பினர் இல்லாத அவர், எப்படி கட்சி அலுவலகத்துக்குச் செல்ல முடியும்? இதைவைத்துத்தான் நாங்கள், ‘அவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட உள்ளனர்.
ஆகையால் காவல் துறை கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுங்கள்’ எனச் சொல்லி மனு அளித்திருக்கிறோம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அவர் (ஓ.பன்னீர்செல்வம்) பெயர் போட்டு அறிக்கைகள் வருவது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
ஆக, சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஓ.பன்னீர்செல்வத்தை ஏன் திமுக அரசு கைதுசெய்யவில்லை? அதுதான் எங்களது கேள்வி? ஒரு கிரிமினலை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் இன்றைய ஆளுங்கட்சி நடந்துகொண்டிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி, லெட்டர்பேடு என எதை அவர் பயன்படுத்தினாலும் அது சட்டவிரோதமே” என்றார் ஜெயக்குமார்
ஜெ.பிரகாஷ்
பன்னீரின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!
