“அதிமுக ஒன்றிணையக் கூடாது என்பதற்காகவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு”… ஓபிஎஸ்

Published On:

| By Selvam

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதேபோல, சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 22) குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு என எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சுமத்தி தமிழ்நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை திமுக சந்தித்துக் கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இதற்கு எடுத்துக்காட்டு அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தன்னுடைய சாதனைகளால் திமுக வெற்றி பெறவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், “ஒன்றுபட்ட அதிமுக” என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2025-ல் அதிமுக ஒன்றிணையும் என்று சில தினங்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார்.

அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மீது திமுக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது நேற்று திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சீரழிந்து வருவதையும், திமுக-வின் மேல் உள்ள கடும் அதிருப்தியையும் மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், இந்த வழக்கு சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என்பதை திமுகவிற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கனவு காண்கிறார்.

அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இலங்கை அதிபர் தேர்தல்: ரணில் விக்ரமசிங்கே பின்னடைவு… அனுர குமார திசநாயக்க முன்னிலை!

மீனவர் பிரச்சினை… ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்! – எச்சரித்த கே.பாலகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share