மருத்துவ காலிப்பணியிடங்கள்: ஓபிஎஸ் காட்டம்!

Published On:

| By Minnambalam

மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ முக்கியமான பதவிகளை திமுக அரசு காலியாக வைத்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜனவரி 30) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவத்‌ துறைகளின்‌ தலைமைப்‌ பதவி இடங்களே காலியாக இருக்கும்‌ அவல நிலை திராவிட மாடல்‌ திமுக ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும்‌ செயலாகும்‌. இது கடும்‌ கண்டனத்திற்குரியது. திமுக அரசின்‌ திறமையின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

ADVERTISEMENT
ops condemn dmk government on medical recruitment delay

தமிழ்நாடு மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறையின் கீழ்‌ இயங்கும்‌ முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக்‌ கல்வி இயக்ககம்‌, மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்‌ பணிகள்‌ இயக்ககம்‌, மருந்துகள்‌ கட்டுப்பாட்டு இயக்ககம்‌ ஆகியவற்றிற்கான தலைமைப்‌ பதவிகள்‌ எல்லாம்‌ கூடுதல்‌ பொறுப்பில்‌ உள்ள நிலையில்‌, இது குறித்து மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை முதன்மைச்‌ செயலாளரிடமும்‌, மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சரிடமும்‌, முதலமைச்சரிடமும்‌ பலமுறை மனுக்களை அளித்தும்‌ எவ்விதமான நடவடிக்கையும்‌ எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்‌ சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கீழ்ப்பாக்கம்‌ மருத்துவக்‌ கல்லூரி முதல்வர்‌ பதவியை வகிப்பவர்‌ மருத்துவக்‌ கல்வி இயக்ககத்தின்‌ இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார்‌ என்றும்‌, ஏற்கெனவே 1000 படுக்கைகள்‌ கொண்ட மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையை நிர்வகித்து வரும்‌ முதல்வரால்‌ பல மருத்துவக்‌ கல்லூரிகளை மேற்பார்வையிடுவது என்பது மிகுந்த சிரமம்‌ என்றும்‌, இதேபோன்று ஏற்கெனவே குடும்ப நலத்‌துறை இயக்குநர்‌ பொறுப்பை வகித்து வருபவரிடம்‌ மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்‌ பணிகள்‌ இயக்குநர்‌ பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும்‌, மருந்துகள்‌ கட்டுப்பாட்டு இயக்குநர்‌ பதவியும்‌ கூடுதல்‌ பொறுப்பில்‌ இருந்து வருவதாகவும்‌ கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ முதல்வர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஏற்கெனவே வேலைப்பளு அதிகமாக இருக்கின்ற நிலையில்‌, அவர்களை இயக்குநர்களாக நியமிக்கும்‌ பட்சத்தில்‌, மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனைப்‌ பணிகளில்‌ அவர்களால்‌ கவனம்‌ செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்‌ என்றும்‌ தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ops condemn dmk government on medical recruitment delay

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌ஜிஆர்‌. மருத்துவப்‌ பல்கலைகழகத்தின்‌ துணை வேந்தர்‌ பதவியே காலியாக உள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக, எந்தெந்த இயக்குநர்‌ பணியிடங்கள்‌ எப்போது காலியாகின்றன என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும்‌. இந்தச்‌ சூழ்நிலையில்‌, இயக்குநர்‌ பதவிகள்‌ வகிப்பவர்களின்‌ ஒய்வுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே அந்த இடத்திற்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியிருந்தால்‌, முக்கியமான இயக்குநர்‌ பதவிகள்‌ இன்று காலியாக இருக்கும்‌ சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.

தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணை வேந்தராக இருந்தவரின்‌ பணிக்காலம்‌ ஏற்கெனவே ஒராண்டு நீட்டிக்கப்பட்ட நிலையில்‌, தகுந்த நபரை தேடுதல்‌ குழுவின்‌ மூலம்‌ தேர்ந்தெடுத்து வேறு ஒருவரை இந்த ஆண்டு முதல்‌ பணியில்‌ அமர்த்தியிருக்க வேண்டும்‌. ஆனால்‌, இன்னும்‌ தெரிவுப்‌ பணியே துவங்காத நிலைமை நிலவுகிறது.

தி.மு.க. அரசின்‌ மெத்தனப்‌ போக்கின்‌ காரணமாக, மருத்துவச்‌ சேவையில்‌ தொய்வு ஏற்பட்டுள்ளது. இல்லம் தேடி மருத்துவம்‌ என்று திமுக அரசு சொன்னாலும்‌, யதார்த்தத்தில்‌ மருத்துவமனை தேடிச்‌ சென்றாலே மருத்துவம்‌ இல்லை என்ற அவல நிலைதான்‌ தமிழ்நாட்டில்‌ நிலவுகிறது. திமுக. அரசின்‌ திறமையின்மை காரணமாக பாதிக்கப்படுபவர்கள்‌ ஏழை, எளிய மக்கள் தான்‌.

முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக கவனம்‌ செலுத்தி, மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ மருத்துவத்‌ துறைகளின்‌ இயக்குநர்‌ பணியிடங்களை முறையாக நிரப்பவும்‌, தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌ஜிஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணை வேந்தர்‌ பதவியினை நிரப்பவும்‌, காலியாகவுள்ள மருத்துவர்கள்‌ மற்றும்‌ மருத்துவம்‌ சார்ந்த பணியிடங்களை நிரப்பவும்‌ போர்க்கால அடிப்படையில்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு!

பேருந்து தீ விபத்து: 11 பேர் காயம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share