இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம்: பன்னீரின் அடுத்த பட்டியல்!

Published On:

| By Aara

அதிமுகவின் இணை ஒருங்கிணப்பாளராக வைத்திலிங்கத்தை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம்.  மேலும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக மூவரை அறிவித்துள்ளார்.

இன்று (ஜூலை 25) ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,  “கழக துணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இன்று முதல் கழக இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக  முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் நியமித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 பொதுக்குழுவில் பன்னீரை கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின் எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்குவதாக பன்னீரும் அறிவித்தார்.

இந்த பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் வெற்றிகரமாக அமையவில்லை என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே தொகுதிச் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்களை நியமித்த ஓ.பன்னீர் செல்வம் இன்று இணை ஒருங்கிணைப்பாளரையும், துணை ஒருங்கிணைப்பாளரையும் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழுவை பன்னீர் கூட்டுவதற்கான ஏற்பாடுகளின் அடுத்தகட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. 

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share