நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கத்துக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் இன்று (டிசம்பர் 16) புதுச்சேரியில் மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் செயலாளர் அ.ஜெகன்நாதன் கூறியுள்ளதாவது: அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanant Lok Adalat) தலைவரான மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி ப.உ.செம்மல், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி ப.உ.செம்மல் மீது உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரணைக்கும், அவர் பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கை அளித்தது. பின்னர் நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை பணியிட மாற்றம் செய்யவும் மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி செம்மல் அவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து அரியலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கிலும், விஜிலன்ஸ் பிரிவு விசாரணையிலும் நீதிபதி ப.உ.செம்மலுக்கு உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. இது இயற்கை நீதிக்கு (Natural Justice) எதிரானது.
K, A Judicial Officer In re (2001) என்ற வழக்கில் மாவட்ட நீதிபதிகள் குறித்த வழக்குக்களில் உயர்நீதிமன்றம் தொடர்புடைய நீதிபதிகளின் கருத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.
மேலும், நீதிபதியின் பெயரைக்கூட வெளியிட கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், நீதிபதி ப.உ.செம்மல், தொடர்பான மேற்சொன்ன உயர்நீதிமன்ற வழக்கில் இத்தீர்ப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டுமென அச்சட்டப் பிரிவுகள் 15A(3), 15A(5) தெளிவாக கூறுகிறது. மேலும், ‘எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்க வேண்டும்’ என உச்சநீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது (Haribhambi vs Satyanarayan and Anr). ஆனால், மேற்சொன்ன இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்கவில்லை.
நீதிபதி ப.உ.செம்மலுக்கு விஜிலன்ஸ் பிரிவு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க விஜிலன்ஸ் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், உயர்நீதிமன்ற பதிவாளர், அவற்றை தர மறுத்ததோடு, அவரை உடனே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி ப.உ.செம்மல்- எஸ்.சி., எஸ்.டி., மக்களின் சட்ட உரிமையை நிலைநாட்டியதற்காக தமிழகக் காவல்துறையும், தமிழக அரசும் கூட்டாக சேர்ந்து உயர்நீதிமன்றத்தின் மூலம் அவரைப் பழிவாங்கியுள்ளது. இது பரவலாக கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டையில் உள்ள திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் இன்று டிசம்பர் 16-ந் தேதி இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார்.
