நாடாளுமன்றத்தில் 100 நாள் வேலை திட்ட புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு, 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு “Viksit Bharat -G RAM G” என பெயர் சூட்டியுள்ளது. மேலும் இத்திட்டத்துக்கு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக மசோதா நகல்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர்.
இதனிடையே மத்திய அரசின் இந்த மசோதா நிறைவேற்றத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுகவின் திருச்சி சிவா, வில்சன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் கொட்டும் பனியிலும் வாட்டி வதைத்த குளிரிலும் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
