மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தக் கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,
- 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாநில தேர்தல் ஆணையர்களின் அகில இந்திய மாநாடு பிப்ரவரி 24-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
- 36 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்பர்
என தெரிவித்திருந்தது.

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் எதிர்வரும் பிப்ரவரி 24, 2026 அன்று மாநில தேர்தல் ஆணையர்களின் அகில இந்திய மாநாட்டை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இது கூட்டாட்சிக்கும், சுயேட்சையாக இயங்கக்கூடிய அமைப்புகளுக்கும் விரோதமான செயலாகும்.
ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுக்க கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமையை எஸ்.ஐ.ஆர் பறித்த வேளையில், மாநிலத் தேர்தல் ஆணையங்களையும் அழைப்பது அநீதிக்கு துணை போவதேயாகும்.
மாநில தேர்தல் ஆணையங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 73 மற்றும் 74ன் படி மாநிலத்தில் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை நடத்தி வருகின்றன. அந்தந்த மாநிலங்களின் சட்டத்திற்கு உட்பட்டு சுயேட்சையாக இயங்க கூடிய மாநில தேர்தல் ஆணையத்தை சீர்குலைப்பதே இம்மாநாட்டின் நோக்கமாக இருக்கும். மேலும், ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நோக்கத்திற்கு இயைந்து போகச் செய்வதற்கும் இந்த மாநாடு பயன்படும். சுயேட்சையாக இயங்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி விட்டது என்பதால் மாநில தேர்தல் ஆணையங்களையும் அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, மாநில தேர்தல் ஆணையர்களின் மாநாட்டை கைவிடுமாறும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
