முதல் நாளே நாடாளுமன்றத்தை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்…இரண்டாவது நாளில் மோடிக்கு காத்திருந்த ஷாக்

Published On:

| By vivekanandhan

18 வது மக்களவையின் முதல் நாளன்றே பிரதமர் மோடிக்கு பல அதிர்ச்சிகளை இந்தியா கூட்டணியின் எம்.பிக்கள் கொடுத்துள்ளனர். முதல் நாளான நேற்று எம்.பிக்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட 262 எம்.பிக்கள் நேற்று உறுதிமொழியோடு பதவியேற்றுக் கொண்டனர். 281 எம்.பிக்கள் இன்று பதவியேற்கின்றனர்.

அரசியல் சாசன புத்தகத்துடன் போராட்டம்

ADVERTISEMENT

முதல் நாளான நேற்று காலை இந்தியா கூட்டணியின் எம்.பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்பாக ஒன்றாகக் கூடினர். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தி முழக்கமிட்டபடி முதல் நாளையே போராட்டத்துடன்தான் துவக்கினர்.

ADVERTISEMENT

”மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து கொண்டு அரசியல் சாசனத்தை தாக்கி வருகின்றனர். எந்த சக்தியும் அரசியல் சாசனத்தை தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம்” என்று ராகுல் காந்தி முழங்கினார்.

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் அரசியல் சாசனத்தை மீறுவதாகச் சொல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை நடத்திய இந்தியா கூட்டணி எம்.பிகள், தங்கள் ஒற்றுமையின் வலிமையைக் காட்டும் விதமாக கையில் அரசியல் சாசன புத்தகத்துடன் ஒன்றாக அணிவகுத்து பாராளுமன்றத்திற்குள் சென்றனர்.

ADVERTISEMENT

புறக்கணிப்பை அறிவித்த உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக, அதிக முறை எம்.பியாக இருந்த ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதே நடைமுறை. அப்படிப் பார்த்தால் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுரேஷ் தான் இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் 8 வது முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் 7 முறை எம்.பியாக இருந்த பாஜகவின் மஹ்தாப் இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் இடைக்கால சபாநாயகருக்கு உதவும் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சி எம்.பிகளான சுரேஷ், டி.ஆர்.பாலு, சுதீப் பந்தியோபாத்யாய் மூவரும் அக்குழுவை புறக்கணிப்பதாக அறிவித்து அடுத்த அதிர்ச்சியை பாஜகவிற்கு கொடுத்தனர்.

மோடி பதவியேற்க வந்தபோது ராகுல், அகிலேஷ் ரியாக்சன்

இந்தி மொழியில் உறுதிமொழியை வாசித்து நாடாளுமன்ற உறுப்பினராய் பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி. அப்போது பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். மோடி பதவியேற்க வரும்போதே எதிர்கட்சி எம்.பிக்கள் அனைவரும் அவரை நோக்கி அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்திக் காட்டி முழங்கினர். நாடாளுமன்றத்தின் முதல் வரிசையிலேயே ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், அயோத்தியில் வெற்றி பெற்ற அவதேஷ் பிரசாத் உள்ளிட்டோர் அமர்ந்து கொண்டு அரசியல் சாசனத்தை மோடியை நோக்கி உயர்த்திக் காட்டினர்.

அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, சிவராஜ் சிங் செளஹான், பியூஷ் கோயல், குமாரசாமி உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

நீட்…ஷேம் முழக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளை பாராளுமன்றத்தில் எழுப்புவதாக முடிவு செய்திருந்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பியாக பதவியேற்க வந்த போது நீட்…நீட் என்றும் ஷேம்…ஷேம் என்றும் முழக்கமிட்டு நாடாளுமன்றத்தை அதிர வைத்தனர்.

டிராக்டரில் வந்த எம்.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியான அம்ரா ராம் நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்து இறங்கினார். நாடாளுமன்ற கேட்டுக்கு வெளியே அவர் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு இறங்கி நடந்து நாடாளுமன்றத்திற்குள் வந்த அம்ரா ராம் செய்தியாளர்களிடம், ”அவர்கள் விவசாயிகள் டெல்லிக்கு வருவதற்கு அனுமதிக்கவில்லை. 13 மாதங்கள் டெல்லி எல்லையிலேயே விவசாயிகள் அமர்ந்திருந்தனர். அவர்களின் டிராக்டர்கள் சிட்டிக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை. இன்று ஒரு விவசாயியும் நாடாளுமன்றத்திற்கு வந்து விட்டார், அவரது டிராக்டரும் நாடாளுமன்றத்திற்கு வந்து விட்டது” என்று தெரிவித்தார்.

காலை நாடாளுமன்ற வாயிலில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் துவங்கிய ஆளுங்கட்சி – எதிர்கட்சி வார்த்தைப் போர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் தொடர்ந்தன. இப்படி நாடாளுமன்றத்தின் முதல் நாளே பல பரபரப்புகளோடு தான் துவங்கியது. எதிர்கட்சிகள் வலுவாக களத்தில் இறங்கியிருப்பதால் இந்த 5 ஆண்டு காலத்தில் நாடாளுமன்றத்தில் பல மோதல் போக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறைகளைப் போல மோடிக்கு இந்த முறை எதிர்கட்சிகளை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதையே முதல் நாள் நிகழ்வுகள் காட்டுகின்றன.

இன்று 281 எம்.பிக்கள் பதவியேற்கின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்.பிக்கள் இன்று பதவியேற்றுள்ளனர். மேலும் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் இன்று பதவியேற்றுள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் முதல் மக்களவை சபாநாயகர் தேர்தல்

பாஜகவின் சபாநாயகர் தேர்வை ஆதரிக்க வலியுறுத்தி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டி.ஆர்.பாலு, கே.சி வேணுகோபால் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க ஒப்புக் கொண்ட எதிர்கட்சிகள், விதிகளின் படி துணை சபாநாயகர் பதவியை இந்தியா கூட்டணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

ஆனால் பாஜக துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு வழங்க முன்வராததால், சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பாக வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று அறிவித்துள்ளது இந்தியா கூட்டணி. இது மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி சார்பாக சபாநாயகர் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாஜக கூட்டணி சார்பாக ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரமடைந்து இதுவரை மக்களவையின் எல்லா சபாநாயகர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. முதல்முறையாக இப்போதுதான் மக்களவையில் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 18வது நாடாளுமன்றம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு முதல் இரண்டு நாட்களிலேயே அதிரடி நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் துவங்கியுள்ளனர்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மிரட்டும் இந்திரா சிலை சென்டிமென்ட்: பிளாஷ்பேக் சொன்ன கராத்தே தியாகராஜன்

வேளச்சேரி, கோயம்பேட்டில் எஸ்கலேட்டருடன் நடை மேம்பாலம் : அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

வாழ்க தமிழ்நாடு, பெரியார்… முருகப்பெருமான் மீது ஆணை… தமிழ்நாடு எம்.பிக்கள் பதவியேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share