பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி இன்று (மே 22) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைத்து ஆதரவு கோர ஏழு எம்.பி-க்கள் கொண்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசு கடந்த மே 17-ஆம் தேதி அமைத்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர், பாஜக எம்.பி-க்கள் ரவி சங்கர் பிரசாத், பைஜாயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் பிரிவு) எம்.பி சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது.

இதில், கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஸ்பெயின், கிரீஷ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க உள்ளனர்.
இந்தநிலையில், கனிமொழி தலைமையிலான குழுவினர் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மாஸ்கோ புறப்பட்டுள்ளனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளிடம் எடுத்துச் செல்வேன். உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தால் நாம் 26 உயிர்களை இழந்துள்ளோம். எனவே பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, ஆனால், என்ன நடந்தது என்ற உண்மையை கூறவே நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறோம்” என்றார்.