ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘Operation Akhal’ ராணுவ நடவடிக்கை 9-வது நாளாக இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி தொடருகிறது. இந்நடவடிக்கையில பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ‘Operation Akhal’ ராணுவ நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கியது. தெற்கு காஷ்மீரின் Akhal பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழித்தொழிக்க இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதில் தற்போதுவரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அடர்ந்த வனம் , குகைகள் நிறைந்த பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்த குகைகளை மறைவிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அகல் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் உயிரிழந்த வீரர்கள் லான்ஸ்நாயக் பிரதிபால் சிங், சிப்பாய் ஹர்மீந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தம் 20 பயங்கரவாதிகளை தேடி அழிக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
