கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. Opening of the Sinhaperumal Temple flyover
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கடவு எண்.47க்குப்பதிலாக, புதியதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு இன்று (பிப்ரவரி 19) திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் – ஸ்ரீபெரும்புதூர் சாலை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாகும்.
இச்சாலையில் தினந்தோறும் லட்சக்கணக்கான பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் போன்றோர்களின் வாகனங்கள் ரயில் பாதையை கடந்து சென்றன.
தினமும் பல முறை ரயில் அடிக்கடி செல்வதால், ரயில்வே கேட் மூடப்படுகின்றன. இதனால், பொது மக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். மேலும், ஒரகடம் சிப்காட் செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரயில் பாதை வழியாக சென்று வந்தன.
இதனால், இந்த தேசிய நெடுஞ்சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. சென்னையின் நுழைவு வாயிலான ஜிஎஸ்டி சாலையின் அந்த பகுதி எப்போதும் வாகன நெரிசல் உடனே காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணி, ரயில்வே திட்டப்பணிகள் 2006-2007ன் கீழ் எடுக்கப்பட்டது. இந்தப் பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து தடையில்லாச் சான்று கிடைக்கப்பெறாததால், கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பணிகள் முன் முடிவு செய்யப்பட்டது.
பின்னர், மகாபலிபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை, சென்னை எல்லைச் சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்துடன் இருப்புப்பாதை கடவு எண்.47இல் மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு, பாலப்பணியில் அதற்குரிய வடிவ மாற்றங்கள் செய்யப்பட்டு, ரூ.138.27 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பணி எப்போது நிறைவடையும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பக்கம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மார்க்கத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ம.வரலெட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். Opening of the Sinhaperumal Temple flyover