ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“இது என் வாழ்வின் புதிய அத்தியாயம். எனது ஆதரவாளர்கள் என் மீது அன்பையும் ஆதரவையும் கொட்டியுள்ளனர். அதனால், நான் அரசியலை விட்டு விலகப்போவதில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் அத்தியாயம் முடிந்துவிட்டது. புதியக் கட்சியை தொடங்கவிருக்கிறேன்” என்று செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் பிடிஐ ஊடகத்திடம் கூறியுள்ளார்.
முன்னதாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, புதிய கட்சியைத் தொடங்குவது அல்லது வேறு கட்சியில் இணைவது என மூன்று முடிவுகளில் இருப்பதாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 18ஆம் தேதி சம்பாய் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியே வந்த போது, திட்டமிடப்பட்ட எனது அனைத்து நிகழ்ச்சிகளும் எந்த விளக்கமும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து நான் கேட்டதற்கு ஜூலை 3 ஆம் தேதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இருப்பதாகவும், அதுவரை எந்த அரசாங்க நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியாது என்றும் என்னிடம் கூறப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
“பல ஆண்டுகளாக கட்சியின் செயற்குழு கூட்டம் நடத்தப்படாமல், ஒருதலைப்பட்சமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது, நான் யாரிடம் சென்று எனது பிரச்சினைகளை கூறுவது?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், சம்பாய் சோரன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் திரும்பிய நிலையில், “நான் நினைத்தால் ஓரிரு நாட்களில் 30,000 – 40,000 பேரை திரட்ட முடியும். எனவே, ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும். புதிய கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். புதிய கூட்டணி கிடைத்தால் இணையவும் தயாராகவும் இருக்கிறேன்” என்றும் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதத்துடன் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது. விரைவில் தேர்தலை சந்திக்கவுள்ளது ஜார்க்கண்ட். இந்தசூழலில், சம்பாய் சோரனின் அறிவிப்பு அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சென்னை: சிறுவன் கால் அகற்றம்… மருத்துவமனை அங்கீகாரம் ரத்து!
முதலீட்டாளர்களின் பெஸ்ட் சாய்ஸ் தமிழ்நாடு… ஏன்? – லிஸ்ட் போட்ட செயின்ட் கோபைன் சிஇஓ
Comments are closed.