‘பட்டங்கள் எதுவும் தராது, பஞ்சர் பழுது பார்க்கும் கடைகளைத் திறந்து கொள்ளுங்கள்’ என்று கல்லூரி திறப்பு விழாவில் மத்தியபிரதேச பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஜூலை 14 ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள 55 மாவட்டங்களில் ’பிஎம் காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ்’ என்ற பெயரில் புதிய கல்லூரிகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் கல்லூரி திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மத்தியப் பிரதேசத்தின் குணா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘பிஎம் காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ்’ திறப்பு விழா நிகழ்ச்சியில் அத்தொகுதி பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், ”கல்லூரிப் பட்டம் பெறுவதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் எதுவும் நடக்கப் போவதில்லை எனபதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் வாழ்வாதாரத்திற்காக மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுது பார்க்கும் கடையைத் திறந்து கொள்ளுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “முன்னதாக வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்களை பக்கோடா விற்க கூறினார் பிரதமர் மோடி. இப்போது, அவரது எம்.எல்.ஏ.க்கள் கல்லூரிப் பட்டங்களை “பயனற்றவை” என்றும், பஞ்சர் கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சொல்கிறார்கள். பொருளாதார தகவல்களை வழங்குவதில் பாஜகவை நாம் பாராட்ட வேண்டும்” என்று ஜெய்ராம் விமர்சித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யாவுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல.
ஆர்எஸ்எஸ் ஊழியரான ஷக்யா, கடந்த ஆண்டு நடைபெற்ற மத்தியபிரதேச சட்டமன்றத் தேர்தலில் குணா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ -ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்றது. இதனையடுத்து ’கோலிக்கு தேசபக்தி இல்லை’ என்று ஷக்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில், ’பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்தியபிரதேசத்தில் அதிகரித்து வருகின்றன’ என்று கூறி வாண்ட்டடாக வந்து மக்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்த நிலையில் தற்போது பஞ்சர் கடை திறந்து பிழைத்து கொள்ளுங்கள் என்று கூறி சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் ஷக்யா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
