பாஸ்கர் செல்வராஜ்
கழிப்பறை விஷயத்தில் தமிழர்களின் தரக்குறைவு
கடந்த மே மாதம் இந்து நாளிதழில் இந்தியா முழுக்க உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் மக்கள் கழிவுகளை வெளியேற்ற திறந்தவெளியைப் பயன்படுத்துவது குறித்த புள்ளிவிவரத்தை மாநில வாரியாகவும், சாதி வாரியாகவும், பணக்கார-ஏழை வர்க்க வாரியாகவும் வெளியிட்டு இருந்தது.
இப்படியான எந்த மாநிலவாரி புள்ளிவிவரம் வந்தாலும் அதில் தமிழ்நாடு எங்கிருக்கிறது எனக் கண்கள் தேடுவது வழக்கம். அதில் தமிழ்நாடு எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது உள்ளக்கிடக்கையாக இருக்கும். ஆனால், இதில் மட்டும் தமிழகம் முன்னால் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கண்கள் கீழிருந்து மேல்நோக்கி பார்த்தது.
எப்போதும் காணக் கிடைப்பதைப்போல நமது தோழர்களின் கேரளம் சிறப்பாகச் செயல்பட்டு கடைசியாக இருந்தது. வழக்கம்போல அதற்கு மேலே தமிழகம் இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. அதிகம் திறந்தவெளியைப் பயன்படுத்தும் கிராமப்புற குடும்பத்தினரைக் கொண்ட மாநிலங்களில் 33.9 விழுக்காட்டுடன் மேலே தமிழகம் நான்காவது இடத்தில் இருந்தது.
பொதுவாக நமது வளர்ச்சியை எடுத்துக்காட்ட மிக மோசமான வளர்ச்சியைக் கொண்ட பீகாரோடும், எதிரிகள் வியந்தோதும் பொருளாதார வளர்ச்சிகொண்ட குஜராத்தோடும் நம்மவர்கள் ஒப்பிடுவது வழக்கம். இதில் 43.9 விழுக்காட்டுடன் பீகார் முதல் இடத்திலும் நம்மைவிட ஓரிரண்டு விழுக்காடு வித்தியாசத்தில் குஜராத் ஆறாவது இடத்திலும் இருக்கிறது.
எதிரியும் நம்மைவிட இதில் பெரிதாக சாதித்துவிடவில்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொள்வோமேயானால் அதைவிட கேவலமான சிந்தனை வேறொன்றும் இருக்க முடியாது. அண்டை மாநிலத்தைப்போல நாம் வளரவில்லையே என்ற ஆதங்கமும் இவ்வளவு வளர்ந்தும் இதில் இவ்வளவு மோசமாக இருக்கிறோமே என்று கோபமும் கொள்ள வேண்டிய விஷயம் இது.
நன்நீருக்கும் கழிவுநீருக்கும் வெவ்வேறு பாதைகள் கட்டி நகர நாகரிகம் கண்ட திராவிடர்களின் வழிவந்த தமிழர்களின் தற்கால தரக்குறைவான இந்த வாழ்வு மிகப்பெரிய தலைகுனிவு. இது வெறும் அவமானகரமான நிலை மட்டுமல்ல; இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடும் அது நமது மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளும் குறிப்பாக, பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் நலவாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் சொல்லி மாளாது.

தேவைகளும் இலக்கும்…
இந்தப் புள்ளிவிவரத்தின்படி 6.1 விழுக்காடு இந்திய நகர்வாழ் குடும்பத்தினரும் 25.9 விழுக்காடு கிராமப்புற குடும்பத்தினரும் திறந்தவெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது கழிப்பறை வசதியற்று இருக்கிறார்கள். இதில் பணக்காரர்களும் ஆதிக்க சாதிகளும் பெருமளவு கழிப்பறை வசதிகளைக் கொண்டிருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களில்தான் இந்த வசதியற்றவர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இந்தப் புள்ளிவிவரம் எவ்வளவு துல்லியத்தன்மை வாய்ந்தது என தெரியாது. ஆனால், கிராமப்புற பகுதிகளில்தான் திறந்தவெளி கழிப்பிடப் பழக்கம் அதிகம் என்பதும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களில்தான் ஏழைகள் அதிகம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இந்தப் புள்ளிவிவரம், பொதுவெளியில் மலம் கழித்தலை மட்டுமே கணக்கில் கொள்கிறது; சிறுநீர் கழித்தலைக் குறிப்பிடவில்லை. வீடுகளின் கழிப்பறை வசதியை மட்டுமே பேசுகிறது; பொதுவெளி கழிப்பறைகளின் தேவையைப் பேசவில்லை. வேலைக்குச் செல்பவர்கள், பயணம் மேற்கொள்பவர்கள் அவரவர் வீடு திரும்பும்வரை அடக்கியா வைத்திருக்க முடியும்.
பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை மிகச் சாதாரண நடவடிக்கையாகவே நமது சமூகம் கருதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் புறக்கணிப்பும் உதாசீனமும். பொதுவெளியில் சிறுநீர் கழித்த பின்பு கைகளைக் கழுவும் வாய்ப்போ, பழக்கமோ நம்மிடம் இல்லை. நுண்ணுயிரிகள் தோற்றத்திற்கும் அவை வளர்வதற்கான வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிறப்புறப்பு பகுதியைத் தொட்டுவிட்டு கைகளைக் கழுவாமல் மற்ற இடங்களில் எந்த அசூயையும் இன்றி கைவைக்கிறோம்.
அதேபோல பெண்களுக்கு நீரும் மூடிய அமைப்பும் கொண்ட (WC – water close set) இந்தக் கட்டமைப்பின் அவசியம் குறித்து நமக்கு எந்த புரிதலும் அக்கறையும் இல்லை. “காலால் சிறுநீர் கழிப்பவள்” என்று ஏளன ஆணாதிக்க திமிரோடு பேசும் நமக்கு இயற்கையான இந்தப் பிறப்புறப்பு அமைப்பின் காரணமாக அவர்கள் சிறுநீர் கழித்தபின்பு அந்தப் பகுதியைத் தூய்மை செய்துகொள்ள வேண்டிய தேவை குறித்தோ, குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அடிக்கடி தூய்மை செய்துகொண்டு நோய்த்தொற்றுகளில் இருந்து காக்க வேண்டியதன் அவசியம் குறித்தோ எந்த அறிவும் இல்லை.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல ஆரம்பித்திருக்கும் இந்தக் காலத்தில் அவர்கள் சிறுநீர் கழிக்க வாய்ப்பின்றி நீண்டநேரம் அடக்குவதால் நமது குடும்பப் பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவதை இனியாவது தடுக்க நாம் முன்வர வேண்டும். சுருங்கச் சொன்னால், பொதுக்கழிப்பறைகளின் தேவை முன்னிலும் இப்போது அதிகமாகி இருக்கிறது.
இந்தச் செய்திகள் சொல்ல வருவது, அரசு…
1. நகரங்களைவிட கிராமங்களில் அதிக கவனத்தைக் குவிக்க வேண்டும்.
2. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழைகளை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
3. நகரங்களில் தொழிலாளர்கள் வேலைசெய்யும் இடங்கள், மக்கள் பயணிக்கும் பொதுவிடங்கள், மக்கள் கூடும் மையங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றில் கழிப்பறை, சிறுநீர் கழிக்கும் வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினின் முன்னெடுப்பும் போதாமையும்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினரான பின்பு தனது தொகுதியில் இருக்கும் பொதுக் கழிப்பிட வசதிகளின் இன்றியமையாமை அறிந்து நேரடியாக ஆய்வு செய்தார். (இப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போன்றோரும் இப்படியான ஆய்வுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது) அதன் தொடர்ச்சியில், சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து “கக்கூஸ்” நிகழ்வை நடத்தினார்.
நகரங்களில்தான் அதிகம் பொதுக் கழிப்பறைகள் வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த முயற்சி அவசியமானது. அதில் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பொதுக் கழிப்பறைகளைக் கண்டறிய உதவியாக ஒரு செயலி வெளியிடப்பட்டது. அவரது இணையர் கிருத்திகா, இந்த நிகழ்வை விளம்பரப்படுத்தும் விதமாகவும் பெண்களுக்கு இது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாகவும் பேசி, காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தார். குடும்பம் சகிதமாக உதயநிதி ஸ்டாலின் இதில் பங்கேற்றது வரவேற்புக்குரியது. ஆனால், இந்த முக்கிய நிகழ்வில் மற்ற சென்னைவாழ் மக்கள், பெண்கள் அமைப்புகள், இயக்கங்களின் பங்களிப்பின்றி இது மற்றுமொரு நிகழ்வாக கடந்து சென்றது.
‘உதய்யண்ணா… உதய்யண்ணா…’ என உருகும் அவருடைய இளைஞர் அணியினர் கூட அவரது முக்கிய இம்முயற்சி குறித்து பெரிதாக சமூக ஊடகங்களில் பேசவில்லை. உதயநிதியின் சினிமா பின்னணி மற்றும் சினிமாத்தனமான மக்கள் தொடர்பு காணொலிகளைக் காணும்போது அவர் நாயக மனோபாவத்தில் எல்லோரையும் இதில் இணைக்கும் அவசியத்தை உணரத் தவறிவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.
இப்படியான சமூக மாற்ற செயல்களை, படங்களில் வரும் கதாநாயகனைப்போல் தனிநபராக செய்து சாதிக்க முடியாது. பல்வேறுபட்ட அமைப்புகளை நபர்களை அணுகி, அவர்களின் ஆதரவைப் பெற்று, அவர்களை அங்கீகரித்து, அதற்கான பலன்களை அவர்களுக்கும் விட்டுக்கொடுத்து, குறிக்கோளில் தளராது ஊன்றி நின்று, சமூகத்தை மாற்றும் உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும்.
அவ்வப்போது செய்திகளாக வரும் பகுதிநேர செயல்பாட்டினால் இது செய்யக்கூடியது அல்ல. அண்ணாவும் கலைஞரும் சமூகத்தைப் பற்றிய ஆழமான அரசியல் புரிதலும், அடித்தள மக்களின் தேவையை சார்ந்த அவர்களது செயல்பாடுகளும், மாற்றுக்கருத்து கொண்டோரும் மதித்து அவர்களின் தலைமையை ஏற்கவைக்கும் ஜனநாயகத் தன்மையையும் கொண்டிருந்ததால்தான் அவர்கள் இன்றும் கட்சியிலும் மக்கள் மனங்களிலும் நீடித்து நிலைத்திருக்கிறார்கள் என்பதை அவர் கவனத்தில் கொண்டால், அவர்களின் வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து இதுபோன்ற நிகழ்வுகளைத் தலைமையேற்று சமூக மாற்றத்தை நோக்கியதாக வெற்றிகரமாக நகர்த்திச் செல்ல முடியும்.

தேவை; கழிவறை கட்டமைப்பு, விழிப்புணர்வு, நவீனமயமாக்கம்
அந்த நிகழ்வுக்குப் பிறகு இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடாமல் ஒரு பட நிகழ்வில் அவர் பல லட்சங்களை கழிப்பறை மேம்பாட்டுக்கு நன்கொடையாக அறிவித்து ஒரு தொடர்ச்சியைப் பேணுவதில் மகிழ்ச்சி. அதேபோல 943 இடங்களில் கட்டணமில்லா கழிப்பறைகளைக் கட்டி நிர்வகிக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் 36 கோடி ரூபாய் செலவில் 860 கழிப்பறைகள், 620 சிறுநீர் கழிப்பிடங்களை இன்னும் ஆறு மாதங்களில் கட்டிமுடிக்க அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது.
அதில் நவீன கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறது. 1189km2 பரப்பளவும், 1.3 கோடி மக்களையும், 1km2 பரப்பளவுக்கு 1100 நபர்கள் எனும் அளவுக்கு மக்கள் அடர்த்தியையும், நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து சென்றுகொண்டிருக்கும் நகருக்கு ஆயிரத்துக்கும் குறைவான இடங்களில் பொதுக் கழிப்பறைகள் என்றால் அதைச் செயலியைக் கொண்டுதான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
ஆக, போதுமான அடிப்படை கழிப்பறை கட்டமைப்பு இல்லாததுதான் இங்கே பிரச்சினையின் மையம் என்பதை கக்கூஸ் செயலியே நிரூபித்துக் காட்டுகிறது. எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை இதற்கு மேலும் ஆதாரங்களோடு விளக்கி விவாதித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? இவை எல்லாம் நமக்கு உணர்த்துவது…
1. நமது வீடு, கிராம, நகர, கட்டமைப்புகளில் கழிப்பறை என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அடிப்படையான ஒன்றாக மாறவில்லை. அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
2. இன்றும் நமது மக்கள் தமது கழிவுகளை வெளியேற்றுதல் பற்றி பொதுவெளியில் பேச, விவாதிக்க தயங்குகிறார்கள்; வீடு, தொழில், வர்த்தகம், கோயில் உள்ளிட்ட இடங்களைப் புனிதமானதாகக் கருதுவதால் அசுத்தமான கழிவறையை அவ்வாறான கட்டமைப்பின் அங்கமாக ஏற்க மக்களது மனம் மறுக்கிறது; தன்னுயிரையும் உடலையும்விட அவ்விடங்களை உயர்வான இடத்தில் வைப்பது அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்துக்கும் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.
3. நவீன தொழில்நுட்பங்களை எந்தெந்த இடங்களில் தேவை சார்ந்து பயன்படுத்தி இலக்கை அடைவது என்பது குறித்து அரசியல் நிர்வாக மட்டத்தில் தெளிவில்லை.
ஆக, இந்த பிரச்சினைக்கு 1. கழிவறை கட்டமைப்பை ஏற்படுத்துதல் 2. விழிப்புணர்வு 3. நவீனமயமாக்கம் என முப்பரிமாணத்தையும் உள்ளடக்கிய தீர்வை கண்டடைய வேண்டியிருக்கிறது.
ஒருங்கிணைந்த முறையில் இம்மூன்றையும் உள்ளடக்கிய வகையில் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது?
அடுத்த பதிப்பில் பார்க்கலாம்…
கட்டுரையாளர் குறிப்பு

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சம் கோடி!
திருப்பதி இலவச தரிசனத்துக்கு கீழ் திருப்பதியில் மூன்று கவுன்ட்டர்கள்!
