உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த மாதம் மே முதல் அமலில் இருந்து வருகிறது. ooty kodaikanal e pass
ஆனால் ஏப்ரல் 1 (இன்று)முதல் ஜூன் இறுதி வரை, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, நாளொன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த மாதம் புதிய கட்டுப்பாட்டை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. இது கோடைக் காலம் என்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதாலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வேளையில் புதிய கட்டுப்பாடு சுற்றுலா பயணிகளிடையே சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்ட எல்லைகளான கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 14 சோதனைச் சாவடிகளில் இ பாஸ் உள்ளதா என தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் இன்று ஊட்டி, கொடைக்கானல் எல்லை சோதனை சாவடிகளில் கார்களும் சுற்றுலா பேருந்துகளும் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது.
அதுபோன்று வாகன எண்ணிக்கை அடிப்படையில் இ-பாஸ் வழங்கும் வகையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நாளில் 6,000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு விட்டால், அதற்கு மேல் விண்ணப்பிப்போருக்கு வேறொரு நாளை தேர்வு செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்ய தன்னீரு, “அரசு பேருந்துகளுக்கு இ-பாஸ் தேவையில்லை, சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவற்றிற்கும், நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கும் இ-பாஸ் தேவையில்லை. சோதனை சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்ல தானியங்கி முறையில் வாகனங்களின் பதிவு எண்ணை ஸ்கேன் செய்யும் நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது. முதலில் கல்லாறு சோதனைச் சாவடியிலும், இதன் பின்னர் மற்ற சோதனை சாவடிகளிலும் தானியங்கி முறை அமல்படுத்தப்படும்.
இ-பாஸ் நடைமுறை குறித்து வியாபாரிகள், வணிகர்களிடம் விளக்கி இருக்கிறோம். அவர்கள் சில குறைகளை சொல்லி இருக்கிறார்கள், நாம் அதை நீதிமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம். எனவே வணிகர்கள் போராட்டத்தை திரும்ப பெறுவதாக கூறியிருக்கின்றனர்” என்றார். ooty kodaikanal e pass