ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசியின் ‘வீட்ல விசேஷம்’!

Published On:

| By admin

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ ப்ராஜக்ட்ஸ் நிறுவனங்களுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்பட ஆடியோ வெளியீடு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது

இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, கேபிஏசி லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

ADVERTISEMENT

வணிக சினிமாவில் மக்களை மகிழ்வித்தும், வணிக ரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, பி வாசு போன்ற இயக்குநர்களை, படக்குழு இவ்விழாவில் கௌரவித்தனர். மூவருக்கும் ‘ மக்கள் இயக்குனர் ‘ என்ற பட்டம் கொடுத்து படக்குழுவினர் கௌரவித்தனர்.

இவ்விழாவினில் இயக்குநர் பி வாசு பேசுகையில், “குடும்பங்களை சென்றடையும் படங்களை அதன் பாணியில் புரோமோஷன் செய்கிறார் பாலாஜி. இது போன்ற படத்திற்கு தயாரிப்பாளரும், அதற்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள் கிடைத்துவிட்டால் படம் உயிர்பெற்றுவிடும். படத்தின் அனைத்து கூறுகளையும் மனதில் வைத்து படத்தை திட்டமிட்டு எடுக்க வேண்டும். இந்த படத்தில் எனக்கு பிடித்தமான சத்யராஜ் நடித்துள்ளார். அதுபோக நடிப்பு ராட்சசி நடிகை ஊர்வசி நடித்துள்ளார். ஊர்வசி தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனதில் வைத்து அதற்கேற்றார் போல், மற்றவர்களுக்கு உதவுவார், அத்தோடு சரியாக ரியாக்ட்டும் செய்வார். சத்யராஜ் நடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து, பெரிய அர்பணிப்புடன் வேலை செய்வார். அதனால் தான் அவருடைய பல கதாபாத்திரம் இப்போதும் நின்று பேசுகிறது” என்றார்.

ADVERTISEMENT

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், “ நாங்கள் எடுத்த பழைய படங்களை நினைவில் வைத்து எங்களை அழைத்தது படக்குழுவின் பெருந்தன்மை. பாலாஜியின் உழைப்பு மிகப்பெரியது, பல படங்களில் காமெடியாக நடித்து, பின்னர் ஹீரோவாகி, இயக்குனராகவும் மாறியுள்ளார். ஒரு கதையை பார்வையாளர்களுக்கு எப்படி சொன்னால் பிடிக்கும் என்பதை தெரிந்து செய்பவர் பாலாஜி. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பல நாட்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை. இந்த படத்தை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது, “நான் அறிமுக படுத்திய பாலாஜி நடிகராகி இப்போது இயக்குனராக மாறி இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. பாலாஜியிடம் நல்ல கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. நான் அவர் திறமையை தான் பயன்படுத்தினேன். அவர் இப்போது அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இந்தியை விட பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர்” என்றார்

ADVERTISEMENT

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறுகையில், “பாலாஜி இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடைய வெற்றி எனக்கு சந்தோசம் கொடுக்கிறது. இந்த படம் இந்தியை விட பெரிய வெற்றி பெரும். படத்தின் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதில் உறுதியாக இருப்பார் பாலாஜி. அதனால் இந்த படம் இந்தியை விட சிறப்பான வெற்றியை அடையும் படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை ஊர்வசி, “ என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. நான் பொதுவாக பல நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. பாலாஜி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்த படம் பல நாட்களாக தமிழ் சினிமாவில் வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரை புரிந்துகொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. பழைய சத்யராஜை ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் கொண்டுவந்துள்ளார். இந்த படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்க வைத்துள்ளார்” என கூறினார்.

தயாரிப்பாளர் போனி கபூர், “நான் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ஒரு ரீமேக்காக உருவானது தான். நான் தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ் கலைஞர்களுடைய ஒழுக்கங்களை நான் கேட்டு வியந்திருக்கிறேன். நான் தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளேன். என் குடும்ப வாழ்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும்.ஶ்ரீதேவி, ஊர்வசி பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார், நானும் அதை ஒத்துக்கொள்வேன். அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. நான் தமிழ்படங்களை தயாரிப்பதில் மகிழ்ச்சி. நான் நிறைய தமிழ்படங்களை தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன். பாலாஜி சிறந்த படமாக வீட்ல விஷேசம் படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும்” என்றார்

நடிகர் சத்யராஜ், “நான் கட்டப்பா போன்ற சீரியஸ் படங்களாக நடித்துகொண்டிருந்த போது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை எனக்கு மீட்டு கொண்டு வர வந்தவர் பாலாஜி. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த காரணம் என்ன என நான் கேட்ட போது, உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை என்று கூறினார். ஊர்வசி மேடம் இந்தியன் சினிமாவிற்கு கிடைத்த வரம். ஊர்வசியை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக செய்துவிடமுடியாது. அவர்களுடைய நடிப்பு அபாரமானது.ஆர் ஜே பாலாஜி, சரவணன் சிறந்த காம்போ, இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், “நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி
இந்த படத்தில் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக்குழு சார்பாக நன்றிகள். இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, என்னை வைத்து படம் எடுப்பது மகிழ்ச்சி.

இயக்குனர் சரவணன் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல் தான் எங்களை இரண்டு படங்களை உருவாக்கவைத்தது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிபிடித்துள்ளார். நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு சந்தோசம். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். பா விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். சார்பட்டா, கர்ணன் போன்ற படங்களில் படதொகுப்பாளர் செல்வா, அவர் என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்த படம் பலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. வீட்ல விசேஷம், குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்” என்றார்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share