ADVERTISEMENT

வாணி போஜன் ஃபோன் நம்பர்: தொழிலதிபர் புகார்!

Published On:

| By Balaji

‘நடிகை வாணி போஜன் இருக்கிறாரா?’ என்று கேட்டு தனக்குத் தொடர் ஆபாச அழைப்புகள் வருவதாக ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் இயக்குநருக்கு எதிராக தொழில் அதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்த இந்தத் திரைப்படத்தில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். திரைப்படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜன், அசோக் செல்வனுக்குத் தனது மொபைல் எண்ணைக் கொடுப்பதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

ADVERTISEMENT

திரைப்படம் பார்த்த பலரும் அது வாணி போஜன் பயன்படுத்தும் எண் தான் என்று தவறாகப் புரிந்துள்ளனர். ஆனால் அந்த எண்ணை பூபாலன் என்னும் தொழிலதிபர் நீண்ட வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அவர் தனது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் இந்த மொபைல் எண்ணைத் தான் கொடுத்திருக்கிறார். ஆனால், அது தெரியாமல் வாணி போஜன் தான் அந்த எண்ணைப் பயன்படுத்துகிறார் என்று கருதி தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த எண் வாணி போஜனுடையது அல்ல என்று பலமுறை கூறினாலும் அதனை நம்பாமல் பலரும் ஆபாசமாகப் பேசி வந்துள்ளனர்.

இதனால் பூபாலன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதுடன் அவரது தொழிலும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் உரிய அனுமதியின்றி தன்னுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்திய ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மீது பூபாலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share