பவர் ப்ளே ஓவர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுவும், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதே போன்று 2 ஆவது நாள் போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், சிராஜ் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 117 ரன்களில் இந்திய அணியை சுருட்டிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 22 ) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கடினமில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று (மார்ச் 21 ) Cricbuzz யூடியூப் பக்கத்தில் பேசியதாவது, “முதல் போட்டியை பாருங்கள், ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்குள் இந்திய பவுலர்கள் சுருட்டிவிட்டனர். ஆனால் இந்த முறை அதுபோன்று ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு காரணம் பேட்ஸ்மேன்கள் எந்தவித சரியான சூழலையும் அமைத்து தராதது தான்” என்று தன்னுடைய விமர்சனத்தை ஜாகீர் கான் முன்வைத்துள்ளார்.
மேலும் , “கடந்த 2 போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் முதல் 10 ஓவர்களுக்குள் நிறைய விக்கெட்களை இழந்துவிடுகின்றனர். கையில் பேட்டை வைத்துக்கொண்டு அப்படி என்னதான் செய்கிறீர்கள்? டாப் ஆர்டர் சொதப்புவதால் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு ஒரு நல்ல அடித்தளம் கிடைக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க் ஓப்பனிங்கில் விக்கெட் எடுப்பதால், அடுத்து வரும் பவுலர்களும் அதே நம்பிக்கையுடன் பந்து வீசுகின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்திய அணி இதற்காக தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும். பவர் ப்ளே ஓவர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை வகுத்து அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும். அப்போது தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தங்களது வேலைகளை சரியாக செய்ய முடியும்” என ஜாகீர் கான் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம்: கர்நாடகாவில் ராகுல் வாக்குறுதி!