நாடாளுமன்றத்தில் பி.எச்.டி முடித்த இரண்டே தலித் எம்.பி-க்கள்; இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே!

Published On:

| By vivekanandhan

2 Dalit MPs with PhD

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் பட்டதாரிகள் 147 பேர் இருக்கின்றனர். 98 பேர் பட்டதாரி வல்லுநர்கள் (Graduate Professionals), 147 பேர் முதுகலைப் பட்டதாரிகள், 28 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். ADR(Association for Democratic Reforms) அமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

மேலும் டிப்ளமோ படித்தவர்கள் 17 பேரும், 12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் 65 பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் 34 பேரும், எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் 4 பேரும், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் 2 பேரும், படிக்கத் தெரிந்தவர் ஒருவரும் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

முனைவர் பட்டம் பெற்ற 28 பேரில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் ஆவர். இதில் 2 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆவர். இந்திய அளவில் பட்டியலினத்தைச் சேர்ந்த எம்.பிக்களில் தொல்.திருமாவளவனும், ரவிக்குமாரும் மட்டுமே முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் பி.எச்.டி முடித்த மற்ற இருவர் யாரென்றால், ஒருவர் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மற்றவர் கோவை தொகுதி எம்.பியான கணபதி ராஜ்குமார். கல்வி அவர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்பதை இவர்கள் நால்வரிடமும் தி பிரிண்ட் இணையதளம் பேட்டி கண்டுள்ளது.

ADVERTISEMENT

தொல்.திருமாவளவன்

2 Dalit MPs with PhD

ADVERTISEMENT

”கல்வி மட்டுமே உங்களை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும், அதிகாரத்தை உங்களுக்கு அளிக்கும்” என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திருமாவளவன் சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றவர். அவர் பிறந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூரின் முதல் பட்டதாரி அவர்தான்.

சென்னை சட்டக் கல்லூரியில் முதுகலை குற்றவியல் படிப்பினை முடித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருநெல்வேலி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாமிய மதத்திற்கு மாறியது குறித்தே அவரது முனைவர் பட்ட ஆய்வு இருந்தது. 1981 ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் எதற்காக மதம் மாறினார்கள் என்பது குறித்தும், இத்தனை ஆண்டுகளில் இந்த மதமாற்றம் அவர்களது வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் தனது ஆய்வினை சமர்ப்பித்தார்.

”நான் எப்போதுமே மக்களுடன் இருப்பதால் என்னால் அவர்களின் தினசரி பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு பிரச்சினையை முழுமையாக ஆய்வு செய்யும் போது, நாம் இத்தனை ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் வேறு ஒரு பரிமாணத்தை அது கொடுக்கிறது” என்கிறார் திருமாவளவன்.

சாதி இந்துக்கள் பட்டியலின மக்களின் மீது செலுத்திய பல்வேறு பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் காரணமாக இந்த மதமாற்றம் நடைபெற்றது. இது குறித்து விசாரிப்பதற்காக அப்போதைய அதிமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றையும் அமைத்தது. அந்த கமிட்டி 4 வருடங்கள் கழித்து கட்டாய மத மாற்றங்களை தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்ற பரிந்துரையைக் கொடுத்தது.

இந்த பரிந்துரையை எடுத்துக் கொண்டு 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசாங்கம் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தினைக் கொண்டுவந்தது. கடும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

நீண்ட காலமாக தலித்துகள் மீது அப்பகுதியில் நடந்து வந்த பாகுபாடுகளின் காரணமாகவே அவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்கிறார் திருமாவளவன். அப்படி இஸ்லாமிற்கு மாறியதற்குப் பிறகு, திருநெல்வேலியின் மற்ற பகுதிகளில் உள்ள தலித்துகளைக் காட்டிலும், மீனாட்சிபுரம் தலித் மக்களின் சமூகப் பொருளாதார நிலை மேம்பாடு அடைந்திருப்பதாக திருமாவளவன் குறிப்பிடுகிறார். அந்த ஊர் மக்களிடம் பேசும்போது, இஸ்லாமுக்கு மாறியவர்களின் 2வது மற்றும் 3 வது தலைமுறை சமூகப் பாகுபாட்டிலிருந்து விடுபட்டதாக உணர்கிறார்கள் என்கிறார் திருமாவளவன்.

ரவிக்குமார்

2 Dalit MPs with PhD

விடுதலை சிறுத்தைகளின் மற்றொரு எம்.பி ரவிகுமார் மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்தவர். அவர் சுற்றுலாத் துறை படிப்பில் தனது இளங்கலை பட்டத்தினை முடித்தார். 1984 ஆம் ஆண்டு சட்டப்படிப்பினையும் முடித்தார். 2010 ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அறியப்படாத அரசன் நந்தனின் வரலாறு என்ற தலைப்பில் 63 நாயன்மார்களின் ஒருவரான நந்தனாரைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்.

”பெரியபுராணத்தில் நந்தனார் தீண்டத்தகாதவராகக் காட்டப்படுகிறார். ஆனால் அந்த காலக்கட்டத்தில் தீண்டாமை இல்லை. தீண்டாமைக்கான முதல் ஆவணம் 11 வது நூற்றாண்டில்தான் இருக்கிறது” என்கிறார் ரவிக்குமார். அவர் எம்.எல்.ஏ-வாக ஆனதற்குப் பிறகும் படித்துக் கொண்டே இருந்தார். ஏனென்றால் வயதிற்கும் கல்விக்கும் தொடர்பில்லை. மனிதர்களுக்கு கல்விதான் எல்லாமுமே என்கிறார் ரவிக்குமார்.

தமிழச்சி தங்கபாண்டியன்

தென்சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் மறைந்த திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் மகள் ஆவார். ஆங்கில இலக்கியத்தில் மதுரை தியாகராயர் கல்லூரியில் எம்.ஏ முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் படித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1996 லிருந்து 2008 வரை சென்னை ராணி மேரி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

அவரது உயர் கல்வி முழுக்க ஆங்கில இலக்கியம் சார்ந்து இருந்தாலும், அவரது இலக்கியப் படைப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருக்கின்றன. ”தமிழில் எழுதுவது என்பது என்னுடைய அரசியல் ஸ்டேட்மெண்ட். மத்திய அரசை மட்டுமே மையப்படுத்திய வரலாற்றை நாங்கள் திருத்தி எழுதுகிறோம். எழுதுவது ஒரு கலை வடிவமாக இருந்தாலும், அது எப்போதும் எனது அரசியல் நிலைப்பாடுகளையே காட்டுவதாக இருக்கிறது” என்கிறார் தமிழச்சி.

கணபதி ராஜ்குமார்

கோவை எம்.பியான கணபதி ராஜ்குமார் இதற்கு முன்பு அதிமுகவில் இருந்தவர். இவரும் ஆங்கில இலக்கியத்திலேயே இளங்கலை பட்டம் பெற்றார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டம் பெற்றார். 1989 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவர் கோவையின் மேயராகவும் இருந்தவர். ஜெயலலிதா ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட சிக்கல்களைத் தாண்டி எப்படி ஒரு வெகுஜனத் தலைவராக உருப்பெற்றார் என்பதையே அவர் தனது முனைவர் பட்ட ஆய்வாக மேற்கொண்டார்.

”தமிழ் வரலாற்றில் பெண் தலைவர்களுக்கான பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. பெண்கள் குடும்பத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். நிலவுடைமை அதிகாரத்திற்கு வந்ததிற்குப் பிறகே பெண்களின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டது. ஆனாலும் எல்லா போராட்டங்களிலும் சண்டைகளிலும் அவர்களின் இடம் இருக்கவே செய்கிறது. பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திலும் பெண்களின் பங்கு முக்கியமானது” என்கிறார் ஜெயலலிதா குறித்து ஆய்வு மேற்கொண்ட கணபதி ராஜ்குமார்.

”கல்வி தான் இந்த உலகத்தை நமக்கு திறந்து காட்டும் மூன்றாவது கண். ஏனென்றால் உலகத்தை பல்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை கல்வியே நமக்கு உருவாக்கித் தருகிறது” என்கிறார் அவர்.

நன்றி – தி பிரிண்ட்

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… இறுதி வேட்பாளர்கள் பட்டியல்!

செந்தில் பாலாஜி வழக்கு : 4 மாதங்களில் முடிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு!

பெரியார் உருவாக்கிய சமூக ஓர்மை!

கிரேட் நிகோபார் திட்டம் : பாதிப்பிற்கு உள்ளாகும் 2 முக்கிய உயிரினங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share