“ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் ரம்மி விளையாடி வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழப்பதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதில் பணத்தை இழந்து விரக்தியடைந்த திருச்சி இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 5ம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இப்படி இந்த நிகழ்வுகள் வாடிக்கையாகி வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசர தடைச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து , தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவும் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது.
பின்னர், இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது இந்த தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அவருக்கு அனுப்பப்பட்டது. அவரும் இன்று (அக்டோபர் 7) ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என செய்தி இணையதளங்கள், ஓடிடி இயங்குதளங்கள் மற்றும் தனியார் செயற்கைக்கோள் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், “ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 7) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
“தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு (2021) ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 14 மாதங்களில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அவை இனி தடுக்கப்படும். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது.
இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்