ஆன்லைன் ரம்மி… திறமைக்கான விளையாட்டாக கருத முடியாது: தமிழக அரசு!

Published On:

| By Monisha

online games are not talent game

ஆன்லைன் விளையாட்டுகளை திறமைக்கான விளையாட்டாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது.

ஆனால் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துகின்ற கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு கடந்த ஜூலை 19 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

சிலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மரணம் அடைகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த விளையாட்டுகளைக் குறை கூற முடியாது என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து தமிழக அரசு பதிலளிக்க வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும்.

ரம்மியை நேரில் விளையாடும் போது தான் அதனை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.

இதில் விளையாடுவோரின் அறிவுத் திறன் எப்படி சரிபார்க்கப்படுகிறது என்பதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் விளக்கம் அளிக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டுகளில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது.

ஆன்லைன் விளையாட்டில் கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது” என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

மோனிஷா

மணிப்பூர் விவகாரம்: மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைப்பு!

அமலாக்கத் துறை வசம் செந்தில் பாலாஜி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share