இந்தியாவில் நாள்தோறும் வரும் மோசடி செய்திகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வசதி பெருக பெருக, அதனை பயன்படுத்தி புதிய புதிய வழிகளில் மோசடி செய்வோரும், அதனால் நம்பி ஆயிரம் முதல் கோடிக்கணக்கில் பணத்தை இழப்போரும் அதிகரித்து தான் வருகின்றனர்.
அந்த வகையில் தான் ஆன்லைன் மோசடி மூலம் மிரட்டி பறிக்கப்படும் சில வங்கி அதிகாரிகள் உதவியுடன் கிரிப்டோவாக மாற்றி சிலர் நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்கு தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பகுதி நேர டைப்பிங் வேலை, 2 பக்கம் டைப் செய்தால் 300 ரூபாய் என மெசேஜ் வந்தது. அதனை உண்மை என நம்பி அந்த நிறுவனத்திற்கு ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய ஒப்புக்கொண்டார். அந்நிறுவனம் அவருக்கு 11 மாத கால வேலை செய்ய போலியான ஒப்பந்தம் ஒன்றையும் மற்றும் வேலை செய்வதற்கான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைத்தனர்.
அதன்மூலம் உள்நுழைந்து அவர்கள் கொடுத்த வேலையை செய்து முடித்தார் மகேஷ்குமார். ஆனால் சில நாட்களில் அவரை தொடர்பு கொண்ட அந்நிறுவன அதிகாரிகள், குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காததால் மகேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4,68,127ஐ மிரட்டி பறித்துள்ளனர்.
அதன்பின்னர் தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேஷ் குமார், இந்த ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து புதுச்சேரி சைபர்கிரைமில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக புதுச்சேரி இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மோசடி செய்யப்பட்ட பணம் எங்கே சென்றது, மோசடி கும்பல் எங்கே இருக்கிறது என போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த சிவப்பா லக்ஷ்மண் பானே மற்றும் உதயபான் நான போபடே ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் தங்களுக்கே உரிய பாணியில் போலீசார் விசாரித்ததில், இது மிகபெரிய ஆன்லைன் மோசடி கும்பல் என்பதும், இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட கண்குசரண் சிபரம் பணிகராகி மற்றும் அபிஷேக் என்ற ஜெகத் நாயக் இருவரும் துபாய்க்கு சுற்றுலா விசாவில் சென்று உல்லாச பயணம் மேற்கொண்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை விமான நிலையத்திலேயே பிடிக்கும் வகையில் மத்திய குடியேற்ற துறை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய கண்குசரண் மற்றும் அபிஷேக் இருவரும் மத்திய குடியேற்ற துறை அதிகாரிகளிடம் பிடிப்பட்டனர். இதுதொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவரையும் புதுச்சேரிக்கு அழைத்து வந்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் 35 போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் டைப்பிங் ரைட்டிங், டேட்டா எண்ட்ரி உள்ளிட்ட ஆன்லைன் வேலை தருவதாக கூறி ஆளை சேர்க்கின்றனர். பின்னர் அவர்களது வேலையில் விதி மீறல் நடந்துள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டாம் என்றால் கேட்கும் பணத்தை தர வேண்டும் என மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக டெல்லியில் போலி காவல்நிலையத்தையும் உருவாக்கியுள்ளனர். அப்படி இவர்கள் மிரட்டி இதுவரை பறித்த தொகை எவ்வளவு தெரியுமா? 206 கோடி ரூபாய். ஒருவரிடமிருந்து குறைந்தது 2000 முதல் அதிகபட்சமாக ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் வரை இவர்கள் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
மேலும் இப்படி மிரட்டி பறிக்கப்படும் பணம், துபாய்க்கு இண்டூஸ்இண்ட், இந்தியன் உள்ளிட்ட 14 வங்கிகள் வழியே கிரிப்டோ கரன்சியாக மாற்றி துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் இதேபோன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 2,168 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,592 புகார்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கைதான கண்குசரண் மற்றும் அபிஷேக் ஆகியோரிடமிருந்து, புதுச்சேரியில் இவர்கள் மோசடி செய்த 4.60 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. இருவரும் புதுவை தலைமையியல் குற்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி கும்பலில் இதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 நபர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டையே அச்சுறுத்தி வந்த இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பிடிப்பட்டுள்ள நிலையில், சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் செயல்பட்ட தனிப்படை குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ”நாளுக்கு நாள் புதிய புதிய முறையில் ஆன்லைன் மோசடிகள் பெருகிக்கொண்டே இருக்கின்றது. ஆன்லைன் வழியே வருகின்ற வேலை வாய்ப்பு, டிஜிட்டல் அரஸ்ட், வீட்டில் இருந்தே வேலை, பங்குச் சந்தையில் முதலீடு, குறைந்த விலையில் பொருட்களை தருகிறோம் போன்ற எதையுமே நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
