’ஆன்லைன் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும்’ என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் வளரும் அறிவியல் முன்னேற்றத்தால் கைகளுக்குள் உலகம் அடங்கிப் போனாலும், அதனால் விளையும் ஆபத்துகள் எண்ணிலடங்காதவை. இன்று, செல்போன், இணையம், கணினி வாயிலாக பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைன் குற்றங்கள்
இதனால் பலர் பொருளாதாரத்தையும் வாழ்வையும் இழந்து வருகின்றனர். உதாரணத்திற்கு நீங்கள் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்கும்போது உங்களுக்கு அந்த பொருளை அனுப்பாமல் வேறு ஏதாவது பொருளை அனுப்புவது,
உங்களுடைய செல்போன் எண்ணைத் தெரிந்துகொண்டு போன் கால் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது தொந்தரவு தருவது,
பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி,
அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் எனப் பலவகைகளில் பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில்கூட உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டை வைத்து 50 ஜி.பி. டேட்டா இலவசம் என்ற ஒரு விளம்பரம் அனைத்து வாட்ஸ் அப் குழுக்களிலும் பரவியது.
ஆனால், ’இது போலி’ என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நடிகை அம்மு அபிராமியின் யூடியூப் சேனல் லோகோவை பயன்படுத்தி மர்ம ஆசாமி ஒருவர், அவரது ரசிகரிடம் பணம் பறித்துள்ளார்.
போலீசார் எச்சரிக்கை
அதுபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பயன்படுத்தி, கர்நாடகாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், இளைஞர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளார்.
இப்படி, பல வகைகளிலும் ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது, செல்போன் எண்ணுக்கு ‘லிங்க்’ உடன் வரும் குறுந்தகவலில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்.
உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது போன்று ஆசை வார்த்தை கூறும் குறுந்தகவலை தவிர்த்துவிட வேண்டும்’ என பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் அட்வைஸ்
அதேநேரத்தில், ஆன்லைன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (டிசம்பர் 6) வெளியிட்டு ட்விட்டர் பதிவில், ’ஆன்லைன் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும்.
இது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளால் மேலும் பலர் பாதிக்கப்படுவதை தடுக்கவும் உதவும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்