சிறப்புக் கட்டுரை: ஆன்லைன் கல்வியும் மாணவர்களின் அன்றாடமும்!

Published On:

| By Balaji

பேராசிரியர் நா.மணி

“தண்ணிய போட்டுட்டு வந்து அம்மாவ அடி அடியின்னு அடிக்கிறாரு மேடம். நாங்க பக்கத்தில போனா எங்களையும் அடிக்கிறாரு. ஒண்ணும் முடியாம போலீஸுக்குப் போனோம். கூப்பிட்டு விசாரிக்கிறோம்னாங்க. இதுவரைக்கும் கூப்படல. வீட்டு ஓனர் வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டாங்க. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. டாஸ்மாக் கடைகள் எல்லாம் அடச்சிருக்கு. கம்னு உட்காந்து இருக்காரு. அவரு வருமானம், அவருக்குத் தண்ணி போடவே சரியாப் போயிரும். நானும் அம்மாவும் வேலைக்குப் போனால்தான் வருமானம், சாப்பாடு. எப்படி மேடம் மீட்டிங்குக்கு வர்றது?” என்று சொல்ல முடியாமல் சொல்லி அழும் மாணவி எங்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்ட வகுப்புக்கு வர இருக்கிறார்.

இணைய வழிக் கூட்டம்

கல்லூரிகள் திடீரென்று மூடப்பட்டு நூறு நாட்கள் கடந்து விட்டது. அடுத்த கல்வியாண்டு பிறந்து விட்டது. வகுப்புகள்தான் தொடங்கவில்லை. ஏதேனும் கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை இணைப்போம் என்று ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. “கொரானா விழிப்புணர்வில் இளைஞர்களின் பங்கு” என்று தலைப்பில் ஒரு மாலை நேர இணைய வழிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், இந்த இணைய வழிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெருவாரியாக பெரியவர்கள் மட்டுமே. எங்கள் கல்லூரியைச் சாராதவர்கள். பலர் பேராசிரியர்கள். விரல் விட்டு எண்ணும் அளவே மாணவர்கள் கலந்து கொண்டனர். ‌ மாணவர்களை மையப்படுத்தி, அவர்களுக்கென்று மாலை ஏழு மணியைத் தேர்வு செய்து, கொரானா விழிப்புணர்வு தகவல்கள் அவர்களுக்குச் சென்றால் நிச்சயமாக அவர்கள் மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று கருதி இதை ஏற்பாடு செய்தோம்.

அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் இணைய வசதியுள்ள ஆன்ட்ராய்டு கைப்பேசி வசதியுடன் இருக்கின்றனர். பல மாணவர்கள் பேராசிரியர்களை விடவும் விலையுயர்ந்த கைப்பேசிகளை கையில் வைத்து இருப்பார்கள். வேலைக்குச் சென்றோ குறைந்தபட்சம் அரசு கொடுக்கும் ஸ்காலர்ஷிப் பணத்தைக் கொண்டோ ஒரு ஆன்ட்ராய்டு கைப்பேசிக்கு ஏற்பாடு செய்து கொள்வார்கள். மாணவிகள் மட்டுமே ஒப்பீட்டளவில் ஆன்ட்ராய்டு கைப்பேசி இல்லாமல் இருப்பார்கள். எனவே இதில் பலர் இணைந்து பலன் பெறுவார்கள் என்று நாங்கள் நம்பினோம். அதன் அடிப்படையில் முதல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோம்.‌

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு வருபவர்கள், பலர் பல்வேறு வேலைகளுக்கு விடுமுறை நாட்களில் செல்பவர்கள். பகுதி நேர வேலைக்குச் செல்பவர்கள் பலர். கல்லூரி நாட்களில்கூட வேலை இருந்தால் வேலைக்குச் சென்று விடுவார்கள். பெரும்பாலான மாணவர்கள் மதிய உணவு அருந்துவது இல்லை. இன்று கற்றல் கற்பித்தல் தேர்வுகள் எல்லாம் முற்றாக முடங்கிக்கிடக்கும் நிலையில் நேரடியாகப் பாடத்திட்டம் கற்றல் கற்பித்தல் என்று செல்லாமல், கருத்துரைகள் வழி சில செய்திகள் என்பதன் வழியாகச் சொல்லத் தொடங்கலாம் என்ற எங்கள் முயற்சி கடந்த இரண்டு கூட்டங்களில் பலிக்கவில்லை.

ஏன் பங்கேற்க இயலவில்லை?

வகுப்பு ஆசிரியர்கள் வழியாக “இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை. ஆனால், எதனால் கலந்து கொள்ள இயலவில்லை என்று கேளுங்கள் என்று மட்டும் கூறுங்கள் போதும்” என்று கேட்டு ஏன் பங்கேற்க இயலவில்லை என்ற நிலையைத் தெரிந்து கொள்ள முடிவு செய்தோம். இந்த முடிவின்படி நாங்கள் கற்பிக்கும் இளங்கலைப் பட்டம் முதல் முதுகலைப் பட்டம் வரை ஐந்து வகுப்புகள் உள்ளன. இதில், இளங்கலை மூன்றாம் ஆண்டு முடித்துச் செல்வோர் மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு முடித்துச் செல்வோரிடம் நாங்கள் கேட்கவில்லை. இவர்கள் தேர்வுகள் எழுதவில்லை. கல்லூரியை விட்டு விடை பெறவில்லை என்றாலும், அந்த மனநிலையில் எட்டி இருப்பார்கள். எனவே அவர்களிடம் கருத்துக் கேட்பதைத் தவிர்த்து விட்டோம். இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு ஆகிய மாணவர்களிடம் மட்டுமே கருத்து சேகரித்தோம்.

இந்த செயல்பாட்டில் ஒவ்வொரு மாணவரிடமும் வேலைக்குச் செல்கிறீர்களா, வீட்டில் இருக்கிறீர்களா, வேலைக்குச் சென்றால் வேலை நேரம் என்ன, எப்போது வேலையிலிருந்து வீடு திரும்புவீர்களா, ஆன்ட்ராய்டு கைப்பேசி இருக்கின்றதா இல்லையா, ஆன்ட்ராய்டு கைப்பேசி இருந்தால் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விகளைக் கலந்துரையாடல் போன்று முன் வைத்தார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான், வகுப்பு ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு, மாணவி ஒருவரின் பதிலே கட்டுரையின் முன் பகுதி.

சோத்துக்கு வழியில்லை நெட் கேட்குதா?

“இங்க சோத்துக்கே வழியில்லை. உனக்கு நெட் கேட்குதா” என்று தன் தாயார் கேட்பதாக ஒரு மாணவர் தெரிவித்தார். “காலேஜ் நடக்கும்போது கொண்டு வரக் கூடாதுன்னு திட்டினாங்க‌. இப்போது எதுக்கு போன்ல மீட்டிங்குக்குக் கூப்பிடறாங்க“ – இது ஒரு மாணவியின் தந்தை. “காலை ஏழு மணிக்கு மளிகைக் கடை வேலைக்குச் சென்றால் இரவுதான் வீடு வருகிறேன். எங்க சார் நெட் பார்க்கிறது…” இது மற்றொரு மாணவர் பதில்.

இந்த விடுமுறைக் காலத்தில் வேலைக்குச் செல்லும் மாணவ மாணவிகள் என்‌று பார்த்தால் பெருவாரியானவர்கள் வேலைக்குச் செல்கின்றனர். கிடைக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். மளிகைக் கடையில் சில்லறை விற்பனை, பெயின்ட் அடித்தல், விவசாயக் கூலி வேலை, ஃபேன்ஸி ஸ்டோர், தேங்காய் நார் உரித்தல், தேங்காய் எண்ணெய் மில்லுக்காக தேங்காய் தோண்டுவது, சுமைப் பணி, ஸ்பின்னிங் மில், டைல்ஸ் ஒட்டுதல், கொத்தனார், டையிங் கம்பெனி, லாரி டிரைவர், இரவு காவலர், மூட்டை தூக்குதல், ஏசி மெக்கானிக், டெக்ஸ்டைல்ஸ் குடோனில் வேலை, பெட்ரோல் பங்க் இப்படி ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்கின்றனர். நம் வகுப்பு ஆசிரியர் தானே கேட்கிறார்கள் என்று எந்த வேலையாக இருந்தாலும் ஒளிவுமறைவு இன்றி சொல்லும் மாணவர்கள் உண்டு. வேலையைச் சொல்ல கூச்சப்படும் மாணவர்களும் உண்டு. வேலைக்குப் போகின்றோம் என்று பொதுவாகச் சொல்கிறார்கள்.

இதுவரை வேலைக்குச் செல்லாத மாணவிகள், இப்போது அப்பாவுக்கு வேலை, அண்ணனுக்கு வேலை இல்லை என்று புதிதாக வேலைக்குச் செல்லும் மாணவிகள் இருக்கிறார்கள். ஊரடங்கு அமலுக்கு வந்ததும் நிச்சயம் பேசி திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்து, மசக்கை நிலையில் பங்கெடுத்து கொள்ள முடியாத நிலையில் ஒரு மாணவி இருக்கிறார். கல்லூரி திறந்தாலும் அவர் கல்லூரி வருவாரா தெரியவில்லை. இதற்கும் இவர் இப்போதுதான் முதல் ஆண்டு முடித்து இரண்டாம் ஆண்டுக்கு அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

மாணவர்கள் வேலைக்குச் செல்வது தெரியும் என்றாலும் எப்படியும் மாலை வீடு வந்து சேர்வார்கள். ஒரு மணி நேரம் ஏதேனும் உரையாடல் நிகழ்த்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், இவர்களின் பல்வேறு வேலைகளை முடித்துவிட்டு ஏழு மணிக்கு வீட்டுக்குக் கூட வீட்டுக்கு வர முடியவில்லை. ஒருவேளை வந்துவிட்டாலும் உடனடியாக தயாராகி கூட்டங்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. இரவு ஒன்பது மணி கடந்து நள்ளிரவு பன்னிரண்டு ஒரு மணிக்கு, ஏன் அதிகாலை வீடு வருவோரும் இருக்கிறார்கள். மாலை ஏழு மணிக்குச் சென்று காலையில் வருவோர் உண்டு. நள்ளிரவில் பன்னிரண்டு மணி, ஒரு மணிக்கு வருபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எப்படி மாலை ஏழு மணிக்கு ஒரு சேர பங்கேற்க வேண்டும் என்று கூறுவது?

ஆன்ட்ராய்டு போன் இருந்தும்…

நிறையப் பேரிடம் ஆன்ட்ராய்டு கைப்பேசி இருக்கிறது. ஆனால், இணைய வசதி இருப்பு இல்லை. பத்துக்கும் மேற்பட்டோர் ஆன்ட்ராய்டு கைப்பேசி இல்லாமல் இருக்கிறார்கள். எத்தனை முறை அழைத்தாலும் ஆசிரியர்தான் அழைக்கிறார் என்று தெரிந்தே எடுக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள். எடுத்து இப்போது பேச இயலாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். பேசப் பேச துண்டித்தோர் உண்டு. எப்போதும் அழைத்தாலும் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருக்கும் தொடர்பு எண்கள் இருக்கின்றன. இன்னும் நெட் வொர்க் கவரேஜ் இல்லாத பகுதிகளில் குடியிருப்போர் மூன்று பேர் இருக்கிறார்கள்.

இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி தவறாமல் பத்து பேர் பங்கேற்கும் நிலையில் இருக்கிறார்கள். ஃபேன்ஸி ஸ்டோரில் வேலை செய்யும் மாணவி “இரவு ஒன்பது மணி வரை வேலை என்றாலும் இத்தகைய கூட்டங்கள் அழைப்புகளை ஏற்க அனுமதிக்கிறார் உரிமையாளர்” என்று குறிப்பிட்டார்.

வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் மாணவர்களுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற எங்கள் கருதுகோள் இரண்டு கூட்டங்களில் தோற்றுப் போய்விட்டது. பெரும்பாலானவர்களை இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் இணைக்க முடியும் என்று தோன்றுகிறது. அதுவும் கூட முழுமையானது அல்ல. ஒன்பது மணிக்குத் தூக்கம் வரும் நேரத்தில் எத்தனை வீடுகளில் அவர்கள் தனியாக அமர்ந்து கவனிக்க இயலும்? யார் நம் தரப்பில் கருத்தாளராகக் கலந்து கொள்வார்கள்? டிஜிட்டல் டிவைடு என்று நாம் அடிக்கடி கூறும் “தொடர் இணைய இருப்பு வசதி, தடங்கள் இன்றி இணைய வழி வசதி, அனைவருக்கும் ஆன்ட்ராய்டு கைப்பேசி வசதி” போன்ற சிக்கல்கள் இதற்குப் பின்னரே ஆராயப்பட வேண்டும்.

இணைய இணைப்பைத் தாண்டி

‌ கல்லூரி இல்லாத நேரத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் மாணவ மாணவிகள் கல்லூரி இருந்த காலத்தில் முறையாகக் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். கற்றல் செயல்பாடுகளும் நடந்திருக்கிறது. தாய் தகப்பன் கந்துவட்டிக்குப் பணம் வாங்கியாவது போக்குவரத்து செலவுக்குப் பணம் கொடுத்து கல்லூரி வருவதை உத்தரவாதம் செய்து இருக்கிறார்கள். ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு கற்றல் செயல்பாடு செம்மையாக நடைபெற கல்லூரி முறையாக நடைபெறும்போதே உத்தரவாதம் செய்ய முடியும் என்பதை இந்தச் சிறிய ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. இணைய வழிக் கல்விக்கு இடையூறாக இருப்பது ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் இன்மை, மடிக்கணினி இன்மை, இணைய வசதி இன்மைகள் மட்டுமே காரணம் அல்ல என்பது இந்த ஆய்வின் வழி புலனாகிறது. ஏழ்மை, வறுமை, போதாக்குறைக்கு கொரோனா ஊரடங்கு ஆகியவற்றில் துவண்டு போய் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ள அன்றாட வாழ்வியல் தேவைகளை நிவர்த்தி செய்ய ஓடிக் கொண்டிருக்கும் இவர்களிடம், “அரசு விடுமுறை விட்டிருந்தாலும் வாரம் ஒரு நாள் நாங்கள் சொல்லும் நேரத்துக்கு ஒரு சேர வந்து சேருங்கள்” என்று எப்படிக் கேட்பது?

‌‌கஷ்டத்தில் இருக்கும் குடும்பங்களிலிருந்து பிறந்து வளர்ந்தவர்கள், குடும்ப கஷ்டத்திலேயே படிக்க வருகிறார்கள். கஷ்டத்துக்கு உதவி செய்கிறார்கள். எல்லா கஷ்டங்களையும் தாண்டி இன்னும் கொஞ்சம் பேர் இணையவழிக் கூட்டங்களில் பங்கேற்க இயலும் என்பதையும் மாணவர்களின் பதில்கள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது. இருக்கும் இணைய வசதியை தங்களின் சொந்த விருப்புக்கேற்ப நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க முயற்சி செய்கிறார்கள். நாம் திட்டமிட்டுத் தர இயலும் இந்த விஷயங்கள் அவர்களுக்கு ஈர்ப்பாக இல்லை. இணைய வழிக் கூட்டங்களில் இணையும் மனம் இல்லாமல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். கஷ்டப்படுவது, கஷ்டங்களிலிருந்து மீளத்தானே! ஒரு பகுதியினர் அந்த அடிப்படை முயற்சி இல்லாமல் இருப்பது துடைத்தெறியப்பட வேண்டியது.

‌‌வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம், கல்லூரி இல்லாத நேரத்தில், இணைய வழி சந்திப்பு கடினமாக இருந்தாலும், அடுத்து அவர்களுக்கு முடியும் தருணத்தில் பார்க்கவோ, படிக்கவோ கற்றல் செயல்பாடோடு தொடர்புடைய விஷயங்களை எப்படி தர இயலும் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான கலந்துரையாடலை நடத்தி மாணவர்களின் கருத்துகளைச் சேகரித்து அளித்த பேராசிரியர்கள் இளங்கோவன், ரேவதி மற்றும் கஸ்தூரி ஆகியோருக்கு நன்றி.

கட்டுரையாளர் குறிப்பு: நா. மணி, பொருளாதாரத் துறை தலைவர் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share