சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தலைமையிலான திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸ் கட்சியின் குழு இன்று பிப்ரவரி 28-ந் தேதி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக குழுவுடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு இப்பேச்சுவார்த்தையை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும், நம்பிக்கையோடும் சென்றுகொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது என்பதை ஊடகங்கள் முன்பு சொல்ல முடியாது. நாங்கள் கையெழுத்து போடும்போது உங்களை வைத்துக்கொண்டு, கையொப்பமிட்டு அதை சொல்வோம்.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால் தொகுதிகளைக் குறைக்க வேண்டும் என திமுக சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது, நம்பிக்கையோடு சென்று கொண்டிருக்கிறது. எந்தவித பிரச்சனையும் இல்லை. நீங்களும் இங்க பிரச்சனை, அங்க பிரச்சனைன்னு என செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
இது ஐடியாலஜிக்கல் (ideological) கூட்டணி, இயற்கையான கூட்டணி. இது நம்பிக்கையுள்ள கூட்டணி. இதை யாரும் தொலைக்காட்சிகளோ, பத்திரிகையாளர்களோ சிதைப்பதற்கோ, தவறாக எழுதுவதற்கோ முயற்சிக்க வேண்டாம்.
இந்த கூட்டணி உறுதியான கூட்டணி, தமிழ்நாட்டை காக்கும் கூட்டணி, தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி. மதவாதிகளை, மத நல்லிணக்கத்தை விரும்பாதவர்களை விரட்டுகின்ற கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடமில்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்த மண்ணின் மீது பற்று வைத்திருக்கிறார், தமிழ்நாட்டின் மீது பற்று வைத்திருக்கிறார். பாஜக போன்ற ஆர்.எஸ்.எஸ் போன்ற சக்திகளை தமிழ்நாட்டில் விடமாட்டோம். தெளிவாக சென்றுகொண்டிருக்கிறது, தொகுதி விவரங்களை கையெழுத்து போட்டவுடன் சொல்வோம்.
தவெகவுடன் யாரு பேச்சு நடத்தியது? யாரு நடத்தினா? தவெகவுடன் பேச்சு நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை சார். சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க. அப்படியெல்லாம் எங்கேயுமே அவர் சொல்லல, நாங்க தெளிவா சொல்லியிருக்கோம். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அவர் சொன்ன கருத்து வேறங்க, திரிச்சு போடுறீங்க. அவர் என்ன சொன்னாரு? ஒரு பொலிட்டிக்கல் பார்ட்டினா எல்லோரும் வந்து பேசுவாங்க, எல்லாம் பேசுவாங்கன்னு சொன்னாரே தவிர, நாங்க இங்க பேசுறோம் அங்க பேசுறோம்னு சொன்னாரா?
எந்த இடத்திலயும் எங்களுடைய அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அப்படி சொல்லவில்லை, அவரை வச்சுக்கிட்டே நான் சொல்றேன். நீங்க திரிச்சு திரிச்சு எழுதுறீங்க, திரிச்சு திரிச்சு போடுறீங்க. எங்க ஹை-கமாண்ட் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே எல்லோரும் சொன்னதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு பேசுங்கன்னு தான் சொல்லியிருக்காங்க.
அவர் சொல்லாததெல்லாம் சொன்னார் என்று போடுகிறீர்கள். அவர் சொல்லாததை சொன்னார் என்று எழுதுகிறீர்கள். இதெல்லாம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது, வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே சொன்னேன், அவரைப் பற்றி தவறாக நீங்கள் எழுதினால் டெஃபமேஷன் (defamation) போடுவோம் சொல்லியிருக்கேன். இதைவிட நான் என்ன சொல்ல முடியும்? தெளிவா கேளுங்கள், என்ன சொல்றாங்க என்று எழுதுங்கள். சொல்லாததெல்லாம் ஒரு கற்பனைக்கு எட்டாத அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது. அவரு அங்க பேசுகிறார். இங்கு பேசுகிறார் என்கிறீர்கள், எங்கும் பேசவில்லை. ஒரே ஒரு கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தான் பேசிக்கிட்டு இருக்கோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. இரு கட்சிகளும் தொகுதிகள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொண்டோம். இது முடிவடைந்தவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். எங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம்” என்றார்.
