நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் வளர்ப்பு நாயான பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை , ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம் கார்டன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(48). இவர் சமையல் வேலை செய்து வந்தார். வேலையை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல் மாலை 3 மணியளவில் தனது வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.
குமரன் நகர் பகுதியில் பூங்கொடி மத்திய அரசால் இந்தியாவில் வளர்க்க தடை விதிக்கப்பட்ட பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார். பூங்கொடி தனது பிட்புல் ரக வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென பூங்கொடியின் நாய் கருணாகரனை ஆவேசத்துடன் துரத்தி தொடை பகுதியில் கடித்து குதறியது. அப்போது தடுக்க முயன்ற பூங்கொடியின் கை மற்றும் கால்களையும் கடித்துள்ளது.
இதைக்கண்ட அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். கடைசியாக பூங்கொடி நாயை கட்டுப்படுத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடி கொண்டிருந்த கருணாகரன் மற்றும் பூங்கொடியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். பூங்கொடிக்கு சிகிச்சை அளிக்கப்ட்டது.
இந்நிலையில் பிட்புல் ரக நாயை மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து வலைவீசி பிடித்து நாய்கள் காப்பகத்தில் அடைத்தனர்.
பின்னர் போலீசார் நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில், ஜாபர்கான் பேட்டையில், பிட்புல் வகை நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது, அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல் (Section 304A IPC) மற்றும் அஜாக்கிரதையாக விலங்குகளை கையாளுதல் (Section 289 IPC) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
