SIR விசாரணையின் போது 13 ஆவணங்களில் ஒன்று கட்டாயம்: தேர்தல் ஆணையம்

Published On:

| By Mathi

SIR Election Commission

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் வாக்காளர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டுக் கட்டத்தின் போது கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

அறிவிப்புக் காலகட்டமானது 2025 டிசம்பர் 19 முதல் 2026 பிப்ரவரி 10 வரை ஆகும்.

ADVERTISEMENT

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும்.

இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்குப் பொருந்தக்கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆவணங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதைச் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வர். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இந்த நடைமுறை குறித்து விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலானது 17.02.2026 அன்று வெளியிடப்படும். இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் கேட்கும் 13 ஆவணங்கள்:

1. மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்/ ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ ஓய்வூதிய ஆணை.
              2. 01.01.1987 க்கு முன்னர் இந்தியாவில் அரசு/உள்ளாட்சி அமைப்புகள்/ வங்கிகள்/ அஞ்சல் அலுவலகம்/ எல்ஐசி/ பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டை/ சான்றிதழ்/ ஆவணம்.
              3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.
              4. கடவுச்சீட்டு
              5. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன் / கல்விச் சான்றிதழ்.
              6. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்
              7. வன உரிமைச் சான்றிதழ்
              8. தகுதிவாய்ந்த அதிகாரி வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) / அட்டவணை வகுப்பினர் (SC) / பழங்குடியினர் (ST) அல்லது பிற சாதிச் சான்றிதழ்.
              9. தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள இடங்களில்)
              10. மாநில/உள்ளாட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு.
              11. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.
              12. ஆதார் அட்டைக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடித எண். 23/2025-ERS/Vol.II, நாள் 09.09.2025-இல் (இணைப்பு-II) வெளியிடப்பட்ட அறிவுரைகள் பொருந்தும்.
              13. 01.07.2025 அன்று தகுதி தேதியாக கொண்டு வெளியிடப்பட்ட பீகார் சிறப்புத் தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் நகல்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share