முதல்நாளிலேயே ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி!

Published On:

| By christopher

சபாநாயகராக பதவியேற்ற முதல்நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சு எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை சபாநாயகர் பதவிக்காக இன்று (ஜூன் 26) நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  இருவரும் ஓம்பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து அவரை சபாநாயகர் இருக்கை வரை அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

தொடர்ந்து ஓம் பிர்லாவுக்கு அவையில் பிரதமர் மோடியுடன், ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவையில் தனது அறிமுக உரையை ஆற்றினார் ஓம் பிர்லா. அப்போது,  ”அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இணைந்து தேசத்திற்காக உழைக்க வேண்டும். அவையில் உங்களது பதிவை உறுதி செய்ய வேண்டும். மக்களவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், தெருவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து  அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ’அவசரநிலை’ குறித்து விமர்சித்தார்.

ADVERTISEMENT

எமர்ஜென்சி : இந்தியாவின் இருண்ட காலம்!

அவர் பேசுகையில், “1975ல் நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தும் முடிவை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதனுடன், கடுமையாக எதிர்த்த அனைத்து மக்களின் உறுதியையும் பாராட்டுகிறோம்.

அவசர நிலையை காங்கிரஸ் அரசு கொண்டுவந்ததன் நோக்கம் அனைத்து அதிகாரத்தையும் ஒருவரிடம் கொண்டு வந்து, நீதித்துறையைக் கட்டுப்படுத்துவது, அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை இல்லாதொழிப்பதுதான். இதன் மூலம் குடிமக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு, ஜனநாயகக் கோட்பாடுகள் தாக்கப்பட்டன. இது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஜனநாயக விரோத மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலம் என்பது இந்தியாவின் இருண்ட காலம். அரசியலமைப்பின் கோட்பாடுகள், கூட்டாட்சி கட்டமைப்பின் முக்கியத்துவம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தை நமக்கு நினைவூட்டும் ஒரு காலகட்டமாகும். அந்தக் காலத்தில் இவையெல்லாம் எப்படித் தாக்கப்பட்டன என்பதையும், ஏன் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் இந்தக் காலகட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.”

எமர்ஜென்சியின் 50வது ஆண்டில் நாம் நுழையும் இந்த 18வது லோக்சபா, பாபா சாகேப் அம்பேத்கரால் கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது” என்று ஓம் பிர்லா பேசினார்.

எதிர்க்கட்சிகள் அமளி… அவை ஒத்திவைப்பு!

காங்கிரஸ் மற்றும் இந்திரா காந்தியை தாக்கி பேசிய அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகராக பதவியேற்ற முதல்நாளிலேயே ஓம் பிர்லாவின் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சாதிவாரி கணக்கெடுப்பு : ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!

பதவியேற்ற ஓம் பிர்லா… முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டிய ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share