கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக இவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
இவரின் மறைவையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மறைந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஒரு பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம்.
குறிப்பாக நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், பின்னர் நான் டெல்லிக்கு சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நினைவு கூர்ந்தேன்.
இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கேரள முன்னாள் முதல்வரும், தீவிர காங்கிரஸ் பிரமுகருமான உம்மன் சாண்டி, மக்கள் தலைவராக உயர்ந்து நிற்கும் உத்தமர் உம்மன் சாண்டிக்கு எனது பணிவான அஞ்சலி.
அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை கேரளாவின் முன்னேற்றம் மற்றும் தேசிய அரசியலில் அழியாத முத்திரை பெற்றது. மக்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார்.
குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”உம்மன் சாண்டி ஒரு முன்மாதிரியான காங்கிரஸ் தலைவராக இருந்தார். வாழ்நாள் முழுவதும் கேரள மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக நினைவுகூரப்படுவார்.
அவரை மனதார இழந்துள்ளோம். அவரது அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் இரங்கலும்” என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான உம்மன் சாண்டியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
உம்மன் சாண்டி கேரளாவின் வளர்ச்சி மற்றும் பொது வாழ்க்கையை ஜனநாயகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். திறமையான மற்றும் பிரபலமான தலைவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், அவரது எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக , உம்மன் சாண்டி மறைவையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (ஜூலை 18) ஒருநாள் பொது விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கருங்கடல் ஒப்பந்தம்: ரஷ்யா விலகல் – உணவு தானிய பஞ்சம் வருமா?
