உலகில் ஒமிக்ரான் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அரை மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் எனும் கொரோனாவின் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகளுக்கு தொற்று பரவியது. தொடர்ந்து இந்தியாவில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ஒமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது. டெல்டாவை விட ஒமிக்ரானின் பாதிப்பு தீவிரமாக இல்லை என்றாலும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில் நவம்பர் பிற்பகுதியில் ஒமிக்ரான் கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து 130 மில்லியன் வழக்குகள் மற்றும் 5,00,000 இறப்புகள் உலகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியம் குறைந்து காணப்படுவதாகவும், ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் திறன் தடுப்பூசிக்கு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது மிகவும் கவலை அளித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான மேலாளர் அப்டி மஹமுத் நேற்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ், “நமக்குக் கிடைத்துள்ள ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பான எண்ணிக்கைகள் வியக்கவைக்கிறது. நாம் இன்னும் பெருந்தொற்றுக்கு மத்தியில்தான் இருக்கிறோம். இன்னும் நிறைய நாடுகளில் ஒமிக்ரான் உச்ச நிலையில்தான் இருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகமாக இருப்பது வருத்தமளிக்கிறது. இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும். கொரோனா திரிபுகளில் ஒமிக்ரான் கடைசியாக இருக்காது. அடுத்த கொரோனாவின் மாறுபாடுகள் வர வாய்ப்புள்ளது.
கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும் என்றாலும், நோய் தொற்று ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று 1,188 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
