ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா இன்று (அக்டோபர் 16) பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதனையடுத்து கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி ஜம்மு, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து, ஒமர் அப்துல்லா ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதற்கிடையில் ஜம்மு, காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா இன்று பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) செயல் தலைவர் சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதிப்பு தொடருமா? – பிரதீப் ஜான் சொன்ன தகவல்!
கடைசி வரை நடிகர் திலகம் பாட்டு… அமைதியாக அடக்கம் செய்யப்பட்ட சிங்கப்பூர் சிவாஜி