டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கவுள்ளது. 70 தொகுதிகள் உள்ள அங்கு, கிட்டத்தட்ட 42 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. ஆட்சியை பிடிக்க 36 இடங்களே போதுமானது.
ஆம் ஆத்மி 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை டெல்லியில் ஆட்சியில் இருந்தது. இந்த தேர்தலில் அந்த கட்சியின் நிலைமை படு மோசமாக மாறியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் 67 இடங்களை கைப்பற்றி முதன்முறையாக ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சி அடுத்த தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி கண்டது.கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது ஆட்சியை இழந்து நிற்கிறது.
கடந்த 1993 முதல் 1997 ஆம் ஆண்டு வரை டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. டெல்லி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, முதல் முறையாக ஆட்சி அமைத்த கட்சி பாரதிய ஜனதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் காஷ்மீர் முதல்வருமான ஓமர் அப்துல்லா , ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் விதத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்களுக்குள் போராடி ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறியுள்ளார். இன்டியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததையே ஓமர் அப்துல்லா இடித்துரைத்து சுட்டிக் காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் என்றால் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி வைத்து கொள்கின்றன. டெல்லியில் தேர்தல் என்றால் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுவதையே ஓமர் அப்துல்லா இப்படி சுட்டி காட்டியுள்ளார். கூட்டணிக் கட்சிகள் நீண்ட கால உறவை பேண வேண்டுமென்பது அவரின் கருத்து. ஓமர் அப்துல்லாவின் விமர்சனம் இன்டியா கூட்டணிக்குள் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1.55 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.