ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர், சீனாவில் ரெஸ்டாரன்ட்டில் சர்வராக பணி புரிந்து வருகிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல இளம் வீராங்கனைகள் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தனர். அவர்களில் சீன வீராங்கனை ஸ்ஹோ யாகீனும் ஒருவர். 18 வயதே நிரம்பிய இவர், ஜிம்னாஸ்டிக்கில் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இவர் சீனாவின் ஹூவான் மாகாணத்திலுள்ள ஹெங்யாங் என்ற நகரை சேர்ந்தவர்.
இங்கு, ஸ்ஹோ யாகீன் பெற்றோர் ரெஸ்டரான்ட் நடத்தி வருகின்றனர். தனது படிப்பு மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் ரெஸ்டாரன்டில் பணி புரிவதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகும், ஸ்ஹோ யாகீன் ரெஸ்டாரன்ட்டில் பெற்றோருக்கு உதவிக்கரமாக இருந்து வருகிறார்.
பாரிசில் இருந்து தாய் நாடு திரும்பிய அவர், ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவதை கண்ட பலரும் வியப்படைந்தனர். விளம்பர யுத்தியாக ஸ்ஹோ தனது ஒலிம்பிக் உடையிலேயே , வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார். ஒலிம்பிக் வீராங்கனையே உணவு பரிமாறுவதால் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.
மூன்று வயது முதல் ஜிம்னாஸ்டிக்கில் ஈடுபட்டு வரும் ஸ்ஹோ, 2020 ஆம் ஆண்டு நடந்த சீன சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, இரு இத்தாலி வீராங்கனைகள் முறையே தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றிருந்தனர். போடியத்தில் இத்தாலி வீராங்கனைகள் தங்கள் பதக்கத்தை கடித்தபடி போஸ் கொடுத்தனர். ஆனால், ஸ்ஹோவுக்கும் அப்படியெல்லாம் செய்ய தெரியவில்லை. இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தை வாயால் கடிப்பதை பார்த்த பின்னர் தானும் அதே போல பதக்கத்தை கடித்த சம்பவமும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சரிந்த தங்கம் விலை…எவ்வளவு குறைந்தது?
கட்டி பிடிக்கும் சீனில் வேண்டுமென்றே 17 டேக்… மலையாள நடிகர் மீது ஹேமா கமிஷனில் நடிகை கண்ணீர்!