கடற்கரையில் கொத்துக் கொத்தாக மடிந்த பங்குனி ஆமைகள்… அரசுக்கு கோரிக்கை!

Published On:

| By Selvam

கடந்த ஜனவரி 14-அன்று ஒரே நாள் இரவில் சென்னை கிழக்கு கடற்கரையில் 61 பங்குனி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மெரினா – நீலாங்கரை கடற்கரை இடையே 40 ஆமைகள், நீலாங்கரை – கோவளம் பகுதியில் 10 ஆமைகள், திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் 11 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. கடந்த 16 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட பங்குனி ஆமைகள் இறந்துள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து, இறந்துபோன ஆமைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் பகுப்பாய்வுகளுக்காக வண்டலூர் வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனத்திற்கும் வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில், பெரும்பாலான ஆமைகள் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் ஆமைகளின் நுரையீரலில் தண்ணீர் நிரம்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ட்ரீ பவுண்டேஷனின் நிறுவனர் சுப்ரஜா தாரணி கூறும்போது, “ஆமைகள் இறப்பிற்கு பின்னால் பல காரணிகள் இருக்கிறது. ஆமைகளை பாதுகாக்க ஒரு முழுமையான மற்றும் உள்ளடக்கிய வழிமுறையை உருவாக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான படகுகளில் ஆமை விலக்கு சாதனங்கள் பொருத்தப்படுவதில்லை. நீரில் மூழ்கும் ஆமைகளை காப்பாற்றும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரொக்கப் பரிசு வழங்கலாம்” என்கிறார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சென்னையை ஒட்டிய கிழக்குக் கடற்கரையில் பங்குனி ஆமைகள் இறந்து ஒதுங்கும் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. இச்செய்தி தமிழ் நாடு அரசின் அவசர நடவடிக்கையைக் கோருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு வனத்துறையும், மீன்வளத்துறையும் உள்ளூர் மீனவர்கள், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

செல்வம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… விஜய் எடுத்த முக்கிய முடிவு!

இரண்டு குழந்தைகள் அவசியம்… சந்திரபாபு நாயுடு கொண்டு வரும் புது ரூல்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share