நான் பேசியதை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என்று மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
‘கலைஞர் எனும் தாய்’ என்ற தலைப்பில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தகம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் மூத்த அமைச்சர்களை ஓல்டு ஸ்டூடெண்ட்ஸ் என குறிப்பிட்டு பேசியது திமுகவுக்குள் பேசுபொருளானது.
குறிப்பாக ரஜினி, மூத்த அமைச்சர் துரைமுருகனின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், “மூத்த வயதான நடிகர்கள் பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.
இதை கேட்டு கோபப்பட்ட முதல்வர் ஸ்டாலின், எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு போன் செய்து, “நம்ம விழாவுக்கு கெஸ்ட்டா வந்தவரை இவ்வளவு அவமரியாதையா பேசி இருக்காரு. அவர் என்ன நினைச்சுட்டு இருக்காருன்னு கேளுங்க? மந்திரி பதவியில் இருக்கணுமா வேணாமா கேளுங்க?” என கொந்தளித்திருக்கிறார்.
துரைமுருகனுக்கு போன் செய்தும் முதல்வர் பேசியிருக்கிறார். அதைத்தொடர்ந்து ரஜினியிடம் போன் செய்து பேசியிருக்கிறார் துரைமுருகன். பின்னர், ரஜினி முதலமைச்சரிடம் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில் ரஜினி பற்றிய துரைமுருகன் பேட்டி… ‘அவர் மந்திரியா இருக்கணுமா வேணாமா?’ கொதித்த ஸ்டாலின்…திமுகவில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு தொடரும்” என்று பதிலளித்தார்.
ரஜினியின் கருத்தை சுட்டிக்காட்டி துரைமுருகனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதையேதான் நானும் சொல்கிறேன். எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார்.
இருவரும் எங்கள் நட்பு தொடரும் என்று கூறி இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரசிகர் கொலை… நடிகர் தர்ஷன் சிறையில் ஜாலியோ ஜிம்கானா! – 7 பேர் சஸ்பெண்ட்!
நெருங்கும் தேர்தல்… சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் சிராக் பஸ்வான்
