5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஆம் ஆத்மி பஞ்சாபில் இமாலய வெற்றி அடைந்துள்ளது. பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. 202 இடங்களில் வெற்றி பெற்றால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். ஆனால் 255 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.
இன்று காலை 6.30 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், பாஜக 255 இடங்களிலும், காங்கிரஸ் 2, பகுஜன் சமாஜ்வாதி கட்சி 1 , அப்ன தாள் 12, ஜனசத்த தாள் லோக்தந்திரிக் 2 , நிர்பால் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம் 6, ராஷ்டிரிய லோக் தளம் 8, சமாஜ்வாதி கட்சி 111 , சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
254 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், இது கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் குறைவாகும். 2017இல் 312 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதுபோன்று காங்கிரஸ் 7 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதிலும் குறைந்து தற்போது 2 இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. அதுவே 2017இல் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் கூடுதலாக 64 இடங்களைப் பிடித்து 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும், இதில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 18, பாஜக 2, சுயேட்சை 1, பகுஜன் சமாஜ் கட்சி 1, சிரோமணி அகாலி தள் 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
2017இல் 77 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெறும் 18 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. அப்போது 20 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி இந்த தேர்தலில் 92 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அங்கு பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் 18 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடத்திலும், சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த முறையும் உத்தர காண்டில் பாஜக ஆட்சியைப் பிடித்தாலும், 2017-ஐ காட்டிலும், இந்த தேர்தலில் 23 இடங்களை இழந்துள்ளது. 2017இல் 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 13 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை 18 இடங்களை கைப்பற்றியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் 5, சுயேச்சைகள் 3, ஜனதா தள் 6, குகி மக்கள் முன்னணி 2, நாகா மக்கள் முன்னணி 5, தேசிய மக்கள் கட்சி 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மணிப்பூரில் 2017இல் பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை பெரும்பான்மையை விட ஒரு இடத்தை கூடுதலாக பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை வெறும் 5 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு ஆம் ஆத்மி 2, கோவா முன்னணி கட்சி 1, சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 11, மகாராஷ்டிரவாடி கோமந்தக் 2, ரெவோலஷ்னரி கோன்ஸ் பார்டி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தேர்தலில் 17 இடங்களைப் பிடித்திருந்த காங்கிரஸ் இம்முறை 11 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. 2017இல் 13 இடங்களைப் பிடித்திருந்த பாஜக இம்முறை 20 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணியுடன் ஆட்சியமைக்க உள்ளது.
**-பிரியா**